சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று (16.10.2021) மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்குப் புறப்பட்ட நிலையில், அவருக்குத் தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பளித்தனர். அதன்பின் மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடம் சென்ற சசிகலா, அங்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். நினைவிடத்திலிருந்து தி.நகர் இல்லத்திற்குத் திரும்பியபோது ஆதரவாளர்களைச் சந்தித்தார். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
சசிகலாவின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் வரவேற்றும், விமர்சனங்களைத் தெரிவித்தும் வருகிற நிலையில் அதிமுகவைக் கைப்பற்றும் சசிகலாவின் முயற்சி காலம் தாழ்ந்த முயற்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஜெயலலிதா அம்மையாரோடு நெருக்கமாகப் பல ஆண்டுகள் இருந்தவர் சசிகலா அம்மையார். அவர் சமாதிக்குச் செல்வது, அஞ்சலி செலுத்துவது அல்லது அரசியலில் மீண்டும் தீவிரமாக ஈடுபடுவது என்ற முடிவை எடுப்பது அவருடைய தனிப்பட்ட உரிமை, தனிப்பட்ட விவகாரம். அதனை விடுதலை சிறுத்தைகள் விமர்சனப் பூர்வமாகப் பார்க்க விரும்பவில்லை.
அரசியலில் நீண்ட காலம் இருந்தவர் என்கிற முறையிலேயே அவரோடு சில காலம் எங்களுக்கு ஏற்பட்ட நட்பு அல்லது உறவு சுமுகமாகத்தான் இருந்திருக்கிறது. இப்போது நாங்கள் அவருடைய இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். இது காலம் தாழ்ந்த முடிவு இனி அவரால் அதிமுகவை பழைய வீரியத்தோடுசெயல்பட வைக்க முடியுமா?, முதலில் அந்த அதிமுகவை மீட்க முடியுமா இல்லை காப்பாற்ற முடியுமா என்பதே கேள்விக்குறி. பாஜகவோடு இணைந்து செயல்பட்டதன் மூலம் அதிமுக இன்று பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் இயல்பான உண்மை, இது இட்டுக்கட்டிய கருத்தல்ல. ஆகவே இனிமேல் அவர் முன் முயற்சி எடுத்து கட்சிக்குள்ளேயே ஒரு ஒற்றுமையை உருவாக்கி கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றி இந்த கட்சியை காப்பாற்றுவது என்பது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்” என்றார்.