Skip to main content

“அமைச்சர்கள், அதிகாரிகள் சொல்வது போல் அல்ல” - பேச்சுவார்த்தைக்குப் பின் தொழிற்சங்கத்தினர் பேட்டி

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

"Not what the ministers and officials say," said the trade unionists after the talks

 

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்த சட்ட மசோதாவிற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. 

 

இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் முன்னிலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

 

கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், “இந்த சட்டம் அமைச்சர்கள், அதிகாரிகள் சொல்வது போல் எந்த பாதுகாப்பையும் உள்ளடக்கிய திருத்தம் அல்ல. சட்டத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை. இப்போது இருக்கும் சட்டத்திலேயே பல தொழிற்சாலைக்கு சில குறிப்பிட்ட நேர்வுகளில் சில சலுகைகளைத் தர முடியும். அப்படி இருக்கும் போது அந்த சரத்துகளையே தள்ளிவைப்பது அபாயகரமானது. ஒவ்வொரு தொழிலாளியும் அச்சப்பட வேண்டிய விஷயம். அதனை ஏற்கமுடியாது எனச் சொல்லியுள்ளோம்.

 

9 தொழிற்சங்கங்கள் கூடிப் பேசி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதே அது. அரசாங்கத்திடம் இருந்து விளக்கம் பெற வேண்டிய தேவை தொழிற்சங்கங்களுக்கு இல்லை. சட்டத்தில் சின்ன சின்ன திருத்தங்களுக்கு கூட வழியும் இல்லை வாய்ப்பும் இல்லை. 65A சட்டத்திருத்ததை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் கொடுத்துள்ளோம்; பேசியும் இருக்கிறோம்.

 

முதலமைச்சர் வேறு ஒரு கூட்டத்தில் இருப்பதாகவும் முதலமைச்சரிடம் இன்றே இது குறித்து பேசுவதாகவும் எங்களது கருத்துகளை எடுத்துச் சொல்வதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர். தொழிலாளர்கள் ஆரோக்கியத்தை பாதிக்க வைத்துவிட்டு எந்த லாபம் வந்து என்ன புண்ணியம். அப்படிப்பட்ட லாபம் என்பது கூடாது. தலைமை தாங்கிக் கொண்டு இருப்பதாக பிரதமர் மார்தட்டிக்கொண்டு இருக்கும் ஜி20 நாடுகளில் எந்த நாடும் 8 மணி நேரத்தை தாண்டி வேலை வாங்கவில்லை. வேலை நேரத்தை குறைக்க வேண்டிய காலம் இது. எந்த தொழிலாளியாவது எனக்கு விருப்பமில்லை. வீட்டிற்குச் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டு போகமுடியுமா? 8 மணி நேரம் சட்டம் இருக்கும் போதே 12 மணி நேரம் வேலை வாங்குவதை பல நிறுவனங்கள் செய்து கொண்டு தான் உள்ளன” எனக் கூறினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்