தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்துப் பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது குறித்து ஏற்கனவே பாஜக மாநிலத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசியத் தலைமை இந்த கூட்டணி குறித்து முடிவெடுக்கும். மேலும் இது குறித்து தேசியத் தலைமை அறிவிக்கின்ற வரை நாங்கள் எந்த கருத்தையும் வெளியிடுவதாக இல்லை” எனத் தெரிவித்தார்.