கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 15 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைச் சேர்ந்த 11 பேரும், திமுக சார்பில் 4 பேரும் வெற்றி பெற்றனர். இதில் தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லதா ரங்கசாமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு துணைத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் 8 பேர் திமுகவில் இணைந்தனர். இதனால் தோகைமலை ஒன்றியத்தில் திமுகவின் பலம் 12 ஆக உயர்ந்தது. அதன்பிறகு திமுக ஒன்றியக் குழு உறுப்பினர் ஒருவர் மீண்டும் அதிமுகவிற்கு அணி மாறியதால் தற்போது திமுகவின் பலம் 11 ஆகவும் அதிமுக கூட்டணி பலம் 4 ஆகவும் உள்ளது.
இந்நிலையில், தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவர் லதாவின் கணவரும், தோகைமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான ரங்கசாமி தனது மனைவியின் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஒன்றிய நிர்வாகத்தில் அதிக அளவில் தலையிட்டு வருவதாகவும், ஒப்பந்தப் பணிகள் மற்றும் அரசு வாகனங்களுக்குத் தனது பங்கில் எரிபொருள் நிரப்பிக் கொண்டும், அதற்கான ரசீதை முன்கூட்டியே எடுத்து விடுவதாகவும் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்துள்ளதாகவும் அரசு அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும் அதனைக் கேட்கும் ஒன்றிய கவுன்சிலர்களை ஆட்களை வைத்து மிரட்டி வருவதாகவும் அதற்கு ஒன்றியக் குழுத் தலைவர் துணை போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவர் லதா ரங்கசாமியை பதவியிலிருந்து நீக்க, வரும் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவியிடம் 11 திமுக குழு உறுப்பினர்கள் கடிதம் அளித்தனர். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி, உரிய விசாரணை செய்து பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றார்.