Skip to main content

பொன்முடி கோட்டையில் புதிய மந்திரி..! 

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

New Minister in viluppuram Senchi Masthan

 

திமுக அமைச்சரவையில் புதிய மந்திரிகள் வரிசையில் இடம்பிடித்துள்ளார் செஞ்சி மஸ்தான். செஞ்சி பஸ் நிலையத்தில் கே.எஸ்.எம். என்ற பெயரில் அந்தக் காலம் முதல் இப்போதுவரை சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார் மஸ்தான். ஆரம்ப காலத்தில் தனது டீக்கடையில் காலை முதல் மாலை வரை வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து அந்த உழைப்பின் மூலம் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தவர். 

 

1976 காலகட்டத்தில் திமுகவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், தனது ஊரிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும்போது செஞ்சி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மஸ்தான் கடையில் கட்சிக்காரர்களுடன் அமர்ந்து டீ குடிப்பார். அங்கே கட்சிக்காரர்களுடன் உள்ளூர் அரசியல் நிலவரம் முதல் வெளியூர் அரசியல் நிலவரம் வரை அனைத்தைப் பற்றியும் விவாதம் நடப்பது வழக்கம். அவற்றையெல்லாம் பார்த்து, கேட்டு அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட மஸ்தான், செஞ்சியாரின் தீவிர சீடராக வளர்ந்து திமுகவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். 

 

கடும் உழைப்பாளியான செஞ்சி மஸ்தான், அரசியலில் அவரது வளர்ச்சி திடீரென்று ஏற்பட்டது அல்ல. சிறு சிறு பதவிகள் பெற்று முன்னேறியவர் செஞ்சி, பேரூர் கழக செயலாளராக பதவி பெற்ற பிறகு, 1986 முதல் 2016 வரை ஐந்து முறை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்று பதவியில் இருந்துள்ளார். மாவட்ட செயற்குழு, மாநில பொதுக்குழு, ஒருங்கிணைந்த கடலூர் விழுப்புரம் மாவட்டங்களின் ஆவின் சேர்மனாகவும் பதவியில் இருந்தவர் மஸ்தான். விழுப்புரம் மாவட்டத்தை தெற்கு, வடக்கு, மத்தி என மூன்றாக பிரிக்கப்பட்டபோது இவர், கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி பெற்றார். 

 

அதன் பிறகு 2016இல் செஞ்சி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட தலைமை வாய்ப்பளித்தது. வெற்றிபெற்ற மஸ்தான், தற்போது நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக அதே செஞ்சி தொகுதியில் நின்று வெற்றிபெற்று தற்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துரை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மஸ்தான், அரசியல்  அனுபவ படிப்பில் இவருக்கு மாஸ்டர் டிகிரி கொடுக்கலாம் அந்த அளவிற்கு தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்தவர். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களையும் பெயர் சொல்லி அழைத்துப் பேசும் அளவிற்கு தொகுதி மக்களிடம் மிக நெருக்கமான அறிமுகம் உள்ளவர்.  இவர், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்  கூட ஜாதி, மதம், இனம் கடந்து  அனைவரிடமும்  இணக்கமாக இருப்பவர். 

 

New Minister in viluppuram Senchi Masthan

 

எந்தப் பதவியில் இருந்தாலும் கௌரவம் பார்க்காதவர். அதற்கு உதாரணம் தற்போதுவரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது தமது டீக்கடைக்குச் சென்று வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொடுப்பார். அதேபோல் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஊருக்கு வந்த செஞ்சி மஸ்தான், நான் அமைச்சர் என்பதை எல்லாம் யாரும் பெரிதாக எண்ண வேண்டாம். எப்போதும் போல உங்களில் ஒருவனாக இருப்பேன் என்று கட்சியினரிடம் பொது மக்களிடமும் கூறியுள்ளார். மேலும், பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு சென்று கரோனா பரவல் நிலவரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் முதல் கல்வி அதிகாரிகள்வரை பலரை சந்தித்ததோடு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார நிலையங்கள் இப்படி பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையில் தனது டீக்கடைக்குச் சென்று, டீ போட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தும் அசத்தினார். 

 

1955இல் பிறந்தவர் மஸ்தான், இவருக்கு தற்போது 66 வயது நடைபெறுகிறது. ஆனால் இப்போதும் இளைஞர்களைப் போல சுறுசுறுப்பாக மக்கள் பணி செய்து வருகிறார். இவருக்கு சைத்தானிபி என்ற மனைவியும் மை முன்னிசா, ஜெய் முன்னிசா, தைமுன்சா என மூன்று மகள்களும் மொக்த்தியார் மஸ்தான் என்ற ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். 

 

திமுக முன்னாள்  தலைவர் கலைஞர் காலம் முதல் மிகவும் துணிச்சலோடு அரசியல் செய்தவர் மஸ்தான். இவரது உழைப்பு, கட்சிப்பணி, மக்கள் பணி இவற்றை நன்றாக எடைபோட்டு செஞ்சி மஸ்தானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் பதவி அளித்துள்ளார் என்கிறார்கள் திமுகவின் உடன் பிறப்புகள். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக என்றால் சி.வி. சண்முகம் மட்டுமே அமைச்சர். திமுக என்றால், பொன்முடி மட்டுமே அமைச்சர். 

 

இவற்றையெல்லாம் உடைத்தெறிந்து திமுகவின் தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ள மஸ்தானுக்கு அமைச்சர் பதவி அளித்து, மாவட்ட மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மஸ்தானுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது விழுப்புரம் மாவட்டக் கட்சியினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள செஞ்சி மஸ்தான், அமைச்சர் பதவியின் மூலம் மக்கள் பணியில் மேலும் சிறந்து விளங்குவார் என நம்பிக்கையோடு வாழ்த்துகிறார்கள் விழுப்புரம் மாவட்ட மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.