நீட் தேர்வு மற்றும் JEE தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசை வலியுறுத்தியும், சென்னை (31-08-2020) வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் இன்று கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் ந.செல்லத்துரை. இரா.செல்வம் ஒருங்கிணைப்பில், முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பாரதிபிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ந.செல்லத்துரை நம்மிடம் கூறுகையில், நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு எட்டாக் கனியாக போய்விட்டது. 12ம் வகுப்பு வரை படித்த பாடத்திட்டத்தை முற்றிலும் கைவிட்டு புதிதாக ஒரு பாடத்திட்டதை வைத்து தேர்வு வைக்கின்றனர். பள்ளிக் கல்வித்துறையே தேவையில்லை என்று மத்திய அரசு நினைக்கிறதா என்று தோன்றுகிறது. இதனால் தனியார் கோச்சிங் சென்டர்கள்தான் காசு பார்க்கிறது.
கல்வியை மறைமுகமாக தனியார் மயமாக்கும் முயற்சிதான் இந்த நீட் தேர்வு. பணக்காரர்களுக்கும், ஏற்கனவே மருத்துவத்துறையில் இருப்பவர்கள் தங்கள் வாரிசுகளை மருத்துவத்துறையில் நுழைப்பதற்கும்தான் இது பயன்படுகிறது.
கிராமப்புற மாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள், மலைவாழ் பகுதி மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கான கோச்சிங் சென்டரில் படிக்க முடியாத சூழல்தான் உள்ளது. இந்த மாணவர்களுடைய மருத்துவ கனவு முற்றிலும் தகர்ந்து போகிறது. பணம் இருந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை வந்தால், மருத்துவத்தை சேவை மனப்பாண்மையுடன் செய்ய வேண்டும் என்று எண்ணம் குறைந்து போகிறது. இதனால் பணம் இருந்தால்தான் மருத்துவமனைக்கு போக முடியும் என்ற நிலை வரும்.
கரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைகள் இழுத்து மூடிவிட்டார்கள். அரசு பள்ளியில் படித்து அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள்தான் கரோனா சிகிச்சையில் ஈடுபட்டார்கள். சேவை மனப்பாண்மையுடன் அவர்கள் சிகிச்சை அளித்தார்கள். அளித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மாநில அரசு மத்திய அரசுக்கு பணிந்து போகிற நிலையில் உள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்று அனைத்து கட்சிகள் ஆதரவோடு ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை, அதனை இவர்களும் வலியுறுத்தவில்லை. நீட் தேர்வு மற்றும் JEE தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசை வலியுறுத்தியும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது" என்றார்.