திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், ஜெ. பேரவை மாநில இணை செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பீர்முகமது வரவேற்றார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, “அதிமுக உறுப்பினர் அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக மாவட்ட அதிமுக கழகத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள வேண்டும். திமுக தேர்தலில் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. இதனால் தமிழக மக்கள் திமுக ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது திமுக கூட்டணிக் கட்சிகளைத் தொடர்ந்து திமுக கட்சியினரே திமுக ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆட்சியால் யாரோ ஒரு சிலர் மட்டும் பயனடைகின்றனர். வேறு யாருக்கு எந்த பயனும் இல்லை.
மேலும் விளையாட்டுப் பிள்ளையாகச் சுற்றித்திரிந்தவரைத் துணை முதல்வர் பதவியில் அமர்த்தி உள்ளது மக்கள் மத்தியில் கேலிக்கூத்தாக உள்ளது. எனவே வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அரசு அமைந்திட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்” என்று கூறினார். இக்கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மோகன், பாண்டியன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சதீஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சுதாகர் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.