Skip to main content

தொகுதியை தெரிந்துகொள்வோம்; நாகை நாடாளுமன்ற தொகுதி நிலவரம்;

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

விவசாயிகளும் மீனவர்களும் அதிகம் இருக்கும் தொகுதி நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி.நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி) வேதாரணியம், திருத்துறைப்பூண்டி (தனி) திருவாரூர், நன்னிலம், உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

நாகை நாடாளுமன்றத் தொகுதியில்  6 லட்சத்து 38 ஆயிரத்து 726 ஆண் வாக்காளர்களும்,   6 லட்சத்து 53 ஆயிரத்து 895 பெண் வாக்காளர்களையும்,  37 மூன்றாம்பாலினத்தவர்கள் என மொத்தம் 12 லட்சத்து 92 ஆயிரத்து 658 வாக்குகளை கொண்டுள்ளது. 

நாகை தொகுதியை பொறுத்தவரை விவசாய கூலித் தொழிலாளர்களான தலித் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களே அதிகமானோர் உள்ளனர். இதையடுத்து மீனவர்களும், இஸ்லாமியர்களும், இதர சமுதாயத்தினரும் இருக்கின்றனர். இதுவரை 15 முறை நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள  நாகை தொகுதி காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும் திமுக 4 முறையும்,  அதிமுக இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

16 வது முறையாக தேர்தலை சந்திக்கும் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் தற்போது ஆளும் அதிமுகவும், எதிர்கட்சியோடு கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நேரடியாக மோத உள்ளன.

கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக எம்,பி, யான டாக்டர்,கோபால், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால்,  தற்போது அந்த வாக்குறுதிகள் பிரச்சினைகளாக மாறி புதர்போல் மண்டிக்கிடக்கிறது. அதில் தொகுதி முழுவதும் சிதைந்துக்கிடக்கும் சாலை பிரச்சனை, தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சனை. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் பிரச்சனை, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுத்து கடைமடை பகுதிகளில் பாசனத்திற்கு விடக்கோரி கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பனை பிரச்சினை,  தஞ்சை நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை கிடப்பில் போடப்பட்டுள்ள பிரச்சனை,  வேதாரண்யத்தில் உற்பத்தி செய்யப்படும்  உப்பை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான ஏதுவாக இருந்த ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பிரச்சினை,  நாகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்காமல் இருப்பது,  பழம்பெரும் துறைமுகமான நாகை துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் கிடப்பில்போடப்பட்டது,  இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினை.அரிசி ஆலை அமைக்கும் திட்டம் வேளாண் பல்கலைக்கழக திட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
 

ngp

 

இந்த நிலையில் அதிமுக மீண்டும் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் களம் காண இருக்கிறது. தொகுதியின் சிட்டிங் எம்,பி,யான டாக்டர் கோபால் மீண்டும் போட்டியிடுவார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.  ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது, அவர் போட்டியிடமாட்டார், என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

கடந்த ஐந்தாண்டுகளில் அவரின் செயல்பாடு மிக மோசமானதாகவே மக்கள்மத்தியில் இருக்கிறது. பலமுறை " அவர் எங்கு இருக்கிறார் என்கிற கேள்வியும், எங்கள் எம்பியே காணவில்லை என்கிற கேள்வியையும் சுமந்து பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

"மீனவர்களின் பிரச்சினையாக இருக்கட்டும், விவசாயிகளின் காவிரி பிரச்சினையாக இருக்கட்டும், அவர் பேசியதே இல்லை. நாகையில் உள்ள அக்கரைப்பேட்டை கிராமத்தைத் தத்தெடுத்தார் ஆனால், அந்த கிராமத்திற்கு இதுவரை எந்தவித அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து தரவில்லை." என்கிறார்கள் அந்த கிராமத்து மக்கள்.
 

ngp

 

பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் நிதியில் இருந்து விவசாய கட்டமைப்புக்கு 60 சதவிகிதம் நிதியை பயன்படுத்த வேண்டும். அந்த நிதியில் அவர் இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் விவசாயிகள். இயற்கை சீற்றங்களால் மீனவர்களும், விவசாயிகளும் கூலித் தொழிலாளிகளும் பாதிக்கப்படும் பொழுது, ஆறுதல் கூட சொல்லவருவதில்லை என்கிறார்கள் மீனவர்கள்.

"மும்மதமும் சங்கமிக்கும் இந்த தொகுதியில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகூர் தர்கா ,வேளாங்கண்ணி மாதா ஆலயம், உள்ளிட்ட இடங்களை மேம்படுத்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை". என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். இப்படி ஏகபோக பிரச்சனைகள் அவர்மீது இருக்கிறது மீண்டும் அவர் போட்டியிட்டால் தோல்வி உறுதி".என்கிறார்கள் அதிமுகவினரே.

அவரைத்தொடர்ந்து முன்னாள் திமுக எம்,எல், ஏவாக இருந்து அதிமுகவில் ஐக்கியம் ஆகியிருக்கும் அசோகனும் தொகுதியை கேட்டு சீட்ரேசில் இருக்கிறார். அவருக்கே இந்த முறை வாய்ப்பு என்கிறது நாகை தொகுதி அதிமுக வட்டாரம். 1977 இல் திமுகவில் நகர மாணவர் அணி தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர், 1981 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட செயலாளராகவும், 1984 ஆம் ஆண்டு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும்  இருந்தவரை 1996, 2009 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை திமுக சார்பில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை அளித்தார் கலைஞர்.

திமுகவில் இருந்து  2006 ஆம் ஆண்டு அதிமுகவில் இனைந்து தற்போது அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்து வரும் அவருக்கு 2011-ம் ஆண்டு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதிமூன்று மாதம் பணியாற்றும் வாய்ப்பை ஜெயலலிதா கொடுத்தார். அவருக்கே இந்த முறை வாய்ப்பு என்கிறார்கள்.
 

ngp

 

அவரைத் தொடர்ந்து பொறியாளரான ரமேஷ் ரேசில் முன்னனியில் இருக்கிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரும், நாகை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகவும்  இருந்த முருகையனின் மகனாவார். அமைச்சர்கள், ஓ,எஸ்,மணியன், காமராஜ் உள்ளிட்டவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகிறார். எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்கிறேன். என்கிற ரீதியில் நேர்கானளில் கூறியவர் அதற்கேற்ப களம்காண தயாராக இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ரமேஷ்க்கு மாவட்ட இளைஞரணி துணை தலைவராக பொறுப்பை வழங்கினார் ஜெயலலிதா.  இடதுசாரி சிந்தனைகளை கொண்ட குடும்பத்தில் பிறந்த ரமேஷ்,  முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ,கே,எஸ், விஜயன் அவர்களுடைய மகளைத்திருமணம் செய்து கொண்டார். தற்போது இளைஞராகவும், நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வட்டாரத்திலும், இடது சாரிகள் வட்டாரத்திலும் அதிக நட்பு உடையவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என அதிமுக மேல்மட்டத்தில் தகவல் கிடைக்கிறது.

திமுக கூட்டணில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்,பி, யான செல்வராஜிக்கே மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளனர். அக்கட்சியினர். திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியில் 14.6.1961 ம் தேதி பிறந்த செல்வராஜ்க்கு கமலவதனம் என்கிற மனைவியும், செல்லபிரபா ,தர்ஷிகா என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

 

ngp



எம்,ஏ,எம்பில் படித்த செல்வராஜ், 1980ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினரானார் பிறகு, 1984 ஆம் ஆண்டு மன்னார்குடி மாணவர் மன்றத்தின் ஒன்றியச் செயலாளராகவும்,  1986ம் ஆண்டு இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய செயலாளர்களும், 1990 ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலராகவும், 2001 ம் ஆண்டு மாவட்ட ஊராட்சி தலைவராகவும் 2008 ஆம் ஆண்டு மாவட்ட துணைச் செயலாளராகவும், 2015 ம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் பொறுப்புவகித்தவர். தற்போது மாநில நிர்வாக குழு உறுப்பினராக இருக்கும் இவர். 1991,2004,2009, ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார், அதே வேலையில் 1989,1996,1998 ,ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொகுதியில் நன்கு அறிமுகமான செல்வராஜே இந்த முறையும் களம் இறங்கியுள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் T.செங்கொடிக்கு வாய்ப்புக்கொடுத்துள்ளனர். இவர் ஏற்கனவே அதிமுகவில் காட்டூர் கூட்டறவு சங்க தலைவராக பதவி வகித்தவர். இவருக்கு வயது 34 வழக்கறிஞருக்கு படித்திருக்கிறார். திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியிலும், அதிமுகவிலும் ஆண் வேட்பாளர்களை களம் இறக்குகின்றனர். ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமோ பெண் வேட்பாளரை களமிறக்கி தேர்தலை சந்திக்க இருக்கிறது.
 

நாகை தொகுதி தனித் தொகுதி என்பதால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தில் வாக்காளர் தேர்வு என்பது தடுமாற்றமாகவே இருக்கிறது என்கிறார்கள் அக்கட்சியினர்.

 

 

சார்ந்த செய்திகள்