வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வீதி வீதியாக சென்று வேலூர் பாகாயம், ஓட்டேரி, விருப்பாச்சிபுரம், பலவஞ்சாத்து குப்பம், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் எம்.எல்.ஏ லதா உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பலர் உடன் இருந்தனர்.
அப்போது பேசிய முத்தரசன்,”தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்த பட வேண்டும். தற்பொழுது எனக்கு கிடைத்திருக்கிற தகவல் படி நாகையில் சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்களில் 300 ரூபாய் பணம் தருகிறேன் என்று கூறி இரண்டு சென்டர்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். இது தேர்தல் நடத்தை விதி மீறப்படுவது அப்பட்டமாக தெரிகிறது. இது குறித்து நாகப்பட்டின மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலை ஒரு ஜனநாயக முறையாக நடத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. சுதந்திரமாக, சுயேட்சையாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு; மோடியின் உத்தரவுக்கோ அடிபணிய வேண்டிய அவசியம் இல்லாத ஒரு அமைப்பு. ஆனால் நடைமுறையோ, மோடியின் உத்தரவை ஏற்று செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாக மாறி உள்ளது. இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்க கூடிய ஆபத்துகளில் இதுவும் ஒன்று தேர்தல் தேதிகளை பிரதமரை கலந்து ஆலோசித்து முடிவு செய்வது என்பது இதுவரை இல்லாத நடைமுறையாக தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பது மிகப் பெரிய ஜனநாயக படுகொலை.
1972 ஆம் ஆண்டு கச்சத்தீவினை இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் பொழுது இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இன்றைக்கு கச்சத்தீவை பற்றி பேசுகிற பிரதமர் மற்றும் பாஜகவினர் கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்டு இருக்கலாம். 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்காமல் அதை விட்டுவிட்டு இன்று பேசுவது மலிவான முறையில் வாக்குகளை பெற மிக மிக மோசமான முறையாகும். இத்தகைய பிரச்சாரத்தின் மூலமாக மக்களின் வாக்குகளை பெற்று விட முடியாது. மோடி அம்பலப்பட்டு நிற்கிறார்.
ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை, 15 லட்ச ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி இவை எதனையும் நிறைவேற்றவில்லை மாறாக மதம், ஜாதி, கடவுளை நம்பி கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு, தேர்தல் களத்தில், மக்களுக்கு கடவுள் மேல் இருக்கிற பக்தி, மதத்தின் மீது இருக்கிற நம்பிக்கையை, வைத்து வாக்கு சேகரிக்க முயற்சி செய்கிறார். அந்த முயற்சி ஒருபொழுதும் வெற்றி பெறாது. தமிழ்நாட்டில் வேலூர் உட்பட பாண்டிச்சேரி ஆகியவற்றில் ஒன்று நள்ளிரவு கூட்டணி, ஒன்று கள்ளக் கூட்டணி இந்த இரண்டு கூட்டணியும் தமிழக மற்றும் புதுச்சேரி மக்கள் நிராகரிப்பார்கள்” என்றார்.