திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவரே பழுதான பேருந்தை ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்திய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் செய்திருப்பதைக் கண்டித்தும், மக்கள் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளவில்லை எனத் திமுக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அணி நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லக்கூடிய திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவரே பேருந்து பழுதானதால் ஆர்டிஓ அலுவலகத்தில் கொண்டு போய் பேருந்தை நிறுத்திய அவல நிலை ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு முடிந்து அவர் கைதான போது, முதல்வர் அவரது மகன் உதயநிதி, அமைச்சர்கள் அனைவரும் சென்று அவரை பார்த்தனர். ஆனால், பொன்முடி வீட்டில் ரெய்டு நடந்தபோது ஒருவர் கூட சென்று பார்க்கவில்லை” என்று பேசினார்.
அரசுப் பேருந்து ஓட்டுநர் நன்றாக இருக்கும் பேருந்தைப் பழுதானதாகக் கூறி ஆர்டிஓ அலுவலகத்தில் கொண்டுபோய் நிறுத்தியதாகக் கூறி அரசுப் பேருந்து ஓட்டுநரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.