ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட உள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மணி என்கிற மேனகா போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், “திருமகனை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு தெரியாத செய்தியை நான் சொல்கிறேன். முதலில் நம் கட்சியில் சேரத்தான் அவர் வந்தார். இது உங்களில் அதிகமானோருக்குத் தெரியாது. அதன் பின் அவரது தந்தை என்ன சொன்னார் எனத் தெரியவில்லை. நானும், சரி நீ அங்கேயே இருந்து கொள் எனச் சொல்லிவிட்டேன். அவர் இறந்ததில் எனக்கு மிக மனத்துயரம். துன்பத்தில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்.
ஒன்றரை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக திருமகன் இருந்தார். சட்டமன்றத்தில் ஏதாவது மக்கள் பிரச்சனைகளைப் பேசிப் பார்த்தீர்களா? அவரது தந்தை போனாலும் பேசமாட்டார். மக்களின் பிரச்சனைகளை துணிந்து பேசுபவரை மக்கள் அனுப்ப வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்து, மக்களுக்கு சேவையாற்றி மறைந்த திருமகன் ஈவெரா என்னுடைய நட்பு வட்டாரங்களில் மிகவும் முக்கியமானவர். என்னுடைய உற்ற நண்பர் என்பது தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
அவர் என்னிடம் அனைத்து விஷயங்களையும் பரிமாறிக்கொள்வார். ஆனால், ஒருபோதும் சீமான் பற்றியோ, அவரது கட்சியை பற்றியோ என்னிடம் கூறியதில்லை. சீமான் ஒரு காலத்தில் பெரியாரிய கொள்கையில், சிந்தனையிலிருந்த போது திருமகன் ஈவெராவை சந்தித்து இருக்கலாம். நட்பு ரீதியாக பழகியிருக்கலாம். ஆனால், அவரது கட்சியில் இணைவது பற்றி கண்டிப்பாக ஒருபோதும் பேசியிருக்கமாட்டார்.
மேலும், அவருடைய தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் எதுவும் செய்யவில்லை என்று போகிற போக்கில் அபாண்டமாக பழி சுமத்தியிருக்கிறார் சீமான். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் திருமகன் ஈவேரா பற்றி கேட்டால் அவரின் உயர்வான தன்மை குறித்து சீமானால் விளங்கிக் கொள்ளமுடியும்.
ஆனால், சீமான் அவ்வாறெல்லாம் செய்யக்கூடிய அறிவாளி அல்ல. எப்போதும் சீமான் இறந்து போனவர்கள் பற்றியும், அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதனால் இதுபோன்ற கருத்துக்களை கூறிவருவதே இவரது வாடிக்கையாகிவிட்டது. இதுதான் இவரின் லட்சணம். இதே போன்று சீமானின் பொறுப்பற்ற பேச்சுக்கள் குறித்து சமூக ஊடகங்களால் எவ்வளவு விமர்சிக்கப்பட்டாலும் அவர் தன்னை திருத்திக்கொள்ளமாட்டார். இதற்கு பின்பும் மறைந்தவர்களை குறித்து உண்மைக்கு புறம்பாக அவர்கள் சொல்லாத செய்திகளை பேசாமல் இருக்க வேண்டும். ஊடக வெளிச்சத்திற்காகவும், தன்னை முன்னிலைப் படுத்துவதற்காகவும், இது போன்ற கருத்துக்களை கூறி வரும் சீமானுக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.