
“ஆகஸ்ட் 14 ஆம் தேதி மவுண்ட்பேட்டன் டெல்லியிலேயே இல்லை. அன்று அவர் பாகிஸ்தானில் இருந்தார்” என ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புனை கதைகள் அதிகம் வருகிறது. நேற்று கூட ஆளுநர் புனை கதையை ஜோடித்து நிறைய கதை சொல்கிறார். வரலாற்று ஆசிரியர்கள் நேருவின் வரலாற்றையும் எழுதியுள்ளார்கள். ராஜாஜியின் வரலாற்றையும் எழுதியுள்ளார்கள். அவர்கள் சொல்வது, திருவாவடுதுறை ஆதினம் இங்கிருந்து ரயிலில் சென்றது. விமானத்தில் அல்ல. ஆகஸ்ட் 14 ஆம் தேதி 1947 மாலையில் நேருவின் வீட்டு வாசலுக்கு சென்று அவரை பார்க்க விருப்பம் என சொல்லியுள்ளனர். வந்த இடத்தில் நேருவிடம் உங்களுக்கான நினைவுப் பரிசாக இதை தருகிறேன் என செங்கோலை கொடுத்துள்ளனர். அதையும் நேரு வாங்கியுள்ளார். அந்த நேரத்தில் நேருவுக்கு பல நூறு நினைவுப் பரிசுகள் வந்தன. அந்த நினைவுப் பரிசுகளை பத்திரப்படுத்தி அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்திருந்தார்கள்.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி மவுண்ட்பேட்டன் டெல்லியிலேயே இல்லை. அன்று அவர் பாகிஸ்தானில் இருந்தார். அன்று பாகிஸ்தானின் சுதந்திர தினம். அதை முடித்துவிட்டு இரவு 7 மணிக்குத்தான் டெல்லி வருகிறார். அதன் பின் அவர் இல்லத்திற்கு சென்று குளித்து உணவருந்தி உடைமாற்றிக்கொண்டு அதன் பின்பே இந்திய சுதந்திர தினவிழாவை கொண்டாட இரவு 11.30 மணியளவில் வருகிறார். 12 மணிக்கு சுதந்திரம் கிடைக்கிறது. நேரு உரையாற்றுகிறார். அலகாபாத் அருங்காட்சியகத்தின் தலைமை அதிகாரி பேட்டி கொடுத்துள்ளார். அவர் சொல்வது என்னவென்றால், செங்கோலை அருங்காட்சியகத்தில் பேழையில் வைத்து நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்க கோல் என எழுதியுள்ளனர். நேருவின் கைத்தடி என எழுதவில்லை. இதெல்லாம் வரலாற்று புனை கதை.
வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவதுதான் உண்மையான வரலாறு. மற்றவர்கள் எழுதுவதெல்லாம் புனைகதை. மோடி அரசை பொறுத்தவரை சுதந்திரமே இவர் பிரதமராக வந்த பின் தான் வந்தது, அதற்கு முன் சுதந்திரமே இல்லை என சொல்லுவார்கள் போல. மல்யுத்த வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். 30 நாட்கள் போராட்டம் நடக்கிறது. உள்துறை அமைச்சரோ யாராவது சென்று அவர்களை சந்திக்க வேண்டுமே. போராட்டம் நடத்துபவர்களிடம் பேச வேண்டுமே. 30 நாட்கள் அவர்களை உதாசீனப்படுத்தி அதன் பின் அவர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. மல்யுத்த வீரர்களை விட பயில்வான்களாக காவல்துறையினர் உள்ளனர்” எனக் கூறினார்.