கரோனா நெருக்கடிகளால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தினசரி வாழ்க்கையில் இன்னும் ஒளி பிறக்கவில்லை. அதனால், இந்த வருடம் தீபாவளியை கொண்டாடுவதில் ஏமாற்றமடைந்துள்ளனர். தீபாவளி வந்துடுச்சா? என கேட்குமளவுக்கு அவர்களிடம் விரக்தி எதிரொலிக்கிறது.
இந்த நிலையில், இந்த வருட தீபாவளியை பிரதமர் மோடி எங்கே கொண்டாடுவார்? என்கிற கேள்வி பாஜகவில் எதிரொலித்தபடி இருக்கிறது. பொதுவாக, தீபாவளி பண்டிகை காலத்தில் டெல்லியில் மோடி இருப்பதில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, பண்டிகை காலங்களில் தனது தேசப் பற்றினை வெளிப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருப்பவர்.
அந்த வகையில் தனது தீபாவளி கொண்டாட்டங்களை சில வருடங்களாக இந்திய ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் வைத்துக் கொண்டார். அந்த வகையில், இந்த வருடமும் தங்கள் முகாம்களுக்கு மோடி வருவார் என இந்திய ராணுவத்தினர் சொல்லி வருவதாக தகவல்கள் கசிகின்றன.
இதற்கிடையே, பிரதமரின் தீபாவளி இந்த முறை ராணுவத்தினரோடு இல்லை என்கிற ஒரு தகவலும் மத்திய அரசின் உயரதிகாரிகள் தரப்பில் பரவி வருகிறது.
இது குறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’ தேசத்தின் பாதுகாப்பில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் வகையிலும், அவர்களின் தியாகத்தை போற்றி புகழும் வகையிலும் தீபாவளி பண்டிகையின் போது ராணுவ வீரர்களை சந்தித்து வாழ்த்துகள் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த வருடம், ராணுவதினரை சந்திக்கும் முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. அதேசமயம், தேசத்தை பாதுக்காக்கும் முப்படைகளில் ஒன்றான கப்பற்படை வீரர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ள பிரதமர் விரும்புவதாகத் தெரிகிறது. இது குறித்து, கப்பற்படை தளபதியுடன் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அதனால், பிரதமரின் தீபாவளி இந்த முறை கப்பலில் இருக்கலாம்‘’ என்கிற தகவல்களும் உலாவருகின்றன.