/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2471.jpg)
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "பாரதிய ஜனதா கட்சியின் அங்கமாக செயல்படுகின்ற அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு வேண்டாதவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்தும் அரசியல் கட்சி தலைவர்களை மிரட்டியும் வருகின்றனர்.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பிரதமர் மோடியின் பழிவாங்கும் நடவடிக்கையைக் காட்டுகிறது. எதிர்கட்சிகள் மீது பொய் வழக்குப்போட்டு ஒன்றிய பா.ஜ.க அரசு வெறுப்பு அரசியல் செய்து வருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசின் இத்தகைய நடவடிக்கைகள் விரைவில் அவர்கள் பக்கம் திரும்பும்.
புதுச்சேரி மாநில மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லி சென்று போராட்டம் நடத்த உள்ளோம்.
புதுச்சேரி மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்து சமஸ்கிருதத்தை திணிக்கும் வேலையில், புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசும், ஒன்றிய அரசும் ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏற்கனவே 6 மதுபான ஆலைகள் உள்ள நிலையில், மேலும் புதிய ஆலைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை பல நூறு கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு கலால் துறையில் பலகோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழல் புகாரில் அதிகாரிகள் விரைவில் சிறைக்கு செல்ல உள்ளார்கள். ஊழலை வேடிக்கை பார்க்க மாட்டேன் என்று கூறும் பிரதமர் மோடி புதுச்சேரியில் ஆளும் அரசின் ஊழலை வேடிக்கை பார்ப்பது ஏன்? ஊழல் அரசுக்கு தலைமை தாங்கும் மோடி இனி ஊழலை பற்றி பேசக்கூடாது" என தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)