திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பேரூராட்சி தேர்தலில் அதிமுக, திமுக நகர செயலாளர்கள் போட்டியிடும் வார்டுகளில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் தயாராகி வருகிறார்கள்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘வத்தலக்குண்டு பேரூராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதல் முறையாக போட்டியிடுகிறது. அனைத்து வார்டுகளிலிலும் வேட்பாளர்களை நிறுத்தி எங்கள் பலத்தை காட்ட தயாராக இருக்கிறோம். இந்நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறுகிய காலகட்டத்தில் நடைபெறுவதால் அதனைக் கருத்தில்கொண்டு அதிமுக, திமுக முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் வார்டுகளைத் தேர்ந்தெடுத்து களம் காண தயாராகி வருகிறோம்.
அதிமுக நகரச் செயலாளர் பீர்முகமது போட்டியிட தயாராக இருக்கும் 11வது வார்டு பகுதியில் மக்கள் நீதி மய்யம் ஒன்றியச் செயலாளர் மனோதீபன் போட்டியிடுகிறார். அதேபோல் திமுக நகரச் செயலாளர் சின்னதுரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் வார்டுகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிட தயாராகி வருகிறர்கள்’ என கூறினார்.
பிரபலமான முக்கிய தலைகளோடு மோதும் போது தங்களுக்கான அடையாளம் அதிகரிக்கக்கூடும் என்பதாலும் கமல் ரசிகர்கள் மற்றும் நடுநிலையாளர் வாக்காளர்களை பிரிப்பதன் மூலம் வெற்றி தோல்விக்கும் காரணியாக தாங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கருதும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இந்தத் தேர்தலை பயன்படுத்த தயாராகி வருகின்றனர்.