மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று (02.02.2021) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா, “அதிமுக ஆட்சியால் மாநில உரிமைகள் பெரும் அளவில் பறிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சட்டமன்றத்தில் காவிரி படுகையில் மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று தீர்மானம் கொண்டுவந்தும், தற்போது அதை செயல்படுத்தி வருகிறோம்.
திமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கென 3.5% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், அதிமுக அரசு அதை சரிவர நிறைவேற்றவில்லை. எனவே வரும் நாட்களில் அதனை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம்.
தமிழகத்தில் ஏழு மண்டலமாக பிரித்து பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். நேற்று நிதி அமைச்சர் முழுக்க முழுக்க பெரும் முதலாளிகளுக்கு ஆதராவாகத்தான் இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். இந்தியாவை மொத்தமாக பெரும் கோடீஸ்வரர்களுக்கு விற்பனை செய்யும் வகையில்தான் இந்தப் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
நரேந்திர மோடியின் ஆட்சி மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய ஆட்சியாகத்தான் உள்ளது. நேற்று செஸ் வரியை விதித்திருக்கிறார்கள். இதனால், மாநில அரசுக்கு வரும் நிதி குறையும். எட்டுவழிச் சாலைக்கு கடுமையான எதிர்ப்பு தமிழகத்தில் உள்ளது. ஆனால், நேற்று இதை நிறைவேற்றியே தீருவோம் என கூறி உள்ளார்கள். பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மிக மிக அவதூறாக பேசியுள்ளார். அவரை குண்டர் சட்டத்திலும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்” என்றார்.