திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி, வத்தலகுண்டு காளியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.
அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் ஆறு தொகுதிகளுக்கான அறிவிப்பு மட்டும் வெளிவந்திருந்தது. அதில் ஒன்று, திண்டுக்கல் மாவட்ட நிலக்கோட்டை (தனி) தொகுதி. இத்தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருக்கும் தேன்மொழி சேகருக்கே இம்முறையும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலே. மேலும் தற்போது அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாஜக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதால், இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்படும். ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டில் இடியாப்ப சிக்கல் நிலவிவருகிறது. இதனை எப்படி சமாளிப்பது என எடப்பாடி பழனிசாமி யோசித்து வருகிறார் என்கின்றனர் அதிமுகவினர்.
இந்நிலையில், அதிமுக நகரச் செயலாளர் பீர்முகமது ஏற்பாட்டில் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கணவர் சேகருடன் பங்கேற்ற தேன்மொழிக்கு ஆளுயர மாலை அணிவித்தனர். நிர்வாகிகளின் சால்வைகளைப் பெற்றுக்கொண்ட தேன்மொழி, அருகே நின்றுகொண்டிருந்த எம்.ஜி.ஆர். விசுவாசியான டீக்கடை பாண்டியின் காலில் திடீரென விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். கோவில் அருகில் பூ விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு பெண் மூலம் மல்லிகைப் பூவை எடுத்து தேன்மொழியிடம் நீட்ட ஆசையாக பெற்றுக்கொண்டவர், “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் நீங்கள் என்ன கேட்டாலும் எல்லாம் செஞ்சு தரேன்” என்று வாக்குறுதி அளித்து தனது தேர்தல் வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார்.
தொகுதிப் பங்கீட்டில் நிலவிவரும் குழப்பத்தின் காரணமாக ஒருவேளை தொகுதி மாற்றப்பட்டால் என்ன செய்வது. அதனால், நிலக்கோட்டை தொகுதி குறித்து அறிவிப்பு வந்ததும் அவர் தேர்தல் பணிகளைத் துவங்கிவிட்டார் என்கின்றனர் அப்பகுதி அதிமுகவினர்.