Skip to main content

அறிவாலயத்தை தலைமைச் செயலகமாக மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!

Published on 21/05/2018 | Edited on 21/05/2018

 

 


அறிவாலயத்தை தலைமைச் செயலகமாக மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“திமுக செயல் தலைவர் எப்போதாவது அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினால் அதற்கு மதிப்பு இருக்கும். ஆனால், அவர் தினமும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறார். அறிவாலயத்தை தலைமைச் செயலகமாக மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். வெற்று அறிக்கைகளை வெளியிடுகிறார். கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார். தமிழக மக்கள் அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

 


காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து விதங்களிலும் சட்டப் போராட்டம் நடத்தி உரிமையை நிலைநாட்டியிருக்கிறது. உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்திடம் மத்திய அரசின் தலையீடு இல்லை. உச்ச நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அத்தீர்ப்பை வாசித்துப் பார்க்க வேண்டும். காவிரி நீரை திறக்கும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை. ஆணையத்திடமே அந்த உரிமை உள்ளது.

நீரை திறக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உண்டு. காவிரி விகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டே தீர வேண்டும். காவிரி நீர் மேலாண் ஆணையம், அதிகாரம் படைத்த அமைப்பு தான்.

 

 

 

 


பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் அரசின் வரி வருவாய் பாதிக்கும். அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை குறைக்க வாட்வரி குறைக்கப்படாது. வரி வருவாயை இழக்க மாநில அரசு தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்