தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். பிரச்சாரம், பரப்புரை, வாக்கு சேகரிப்பு, கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் என தேர்தல் களம் வேட்பாளர்களின் பேச்சுக்களால் அனல் பறந்து கொண்டிருக்கின்றது.
இராயபுரம் தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளர் ஐட்ரீம் இரா.மூர்த்தி, மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் சுதர்சனம், துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் பி.கே. சேகர் பாபு, பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், திரு.வி.க. நகர் தொகுதி திமுக வேட்பாளர் தாயகம் கவி, ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர், எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன், திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை ராயபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், “இந்த இராயபுரத்தில் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்ட வேண்டும். அதற்காக வந்து இருக்கிறேன். தோல்வி என்றால் உங்கள் வீட்டு தோல்வி - எங்கள் வீட்டு தோல்வி அல்ல. படுதோல்வி அடைய வேண்டும். டெபாசிட் பறி போக வேண்டும். அதற்காகத்தான் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன். அவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். பலே கில்லாடி அவர். ஜெயலலிதாவையே கவிழ்க்க பார்த்தவர் அவர். 2011-ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா இதே ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவியை கொடுத்து அழகு பார்த்தார்.
ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜெயிலுக்கு போய் விடுவார் என்று நினைத்து, அதனால் அந்த இடத்தை நான்தான் நிரப்பபோகிறேன். அந்த இடத்திற்கு நான்தான் வரப்போகிறேன் என்று தன்னுடைய பிறந்தநாளுக்கு போஸ்டர் அடித்து ஒட்டியவர். இந்த செய்தி ஜெயலலிதா அம்மையாருக்கு தெரிந்து, அந்த பதவியை பறித்த கதைதான் ஜெயக்குமார் கதை. இப்போது எடப்பாடியின் பி.ஆர்.ஓ.வாக வேலை செய்கிறார்” என்று அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்து பேசினார்.