அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படுவது தற்போது அதிகமாக நிகழ்கிறது. அது மட்டுமின்றி ஹேக் செய்த கணக்கில் இருந்து உரிமையாளரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறவர்களுக்கு, தான் தற்போது சிக்கலில் இருக்கிறேன். பணம் அனுப்புங்கள் என்று கேட்பதும் நிகழும்.
இத்தகைய செயல்களை செய்யும் நபர்களை காவல்துறை கைது செய்தாலும் யாரிடமும் சிக்காமல் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் கே.என் நேருவின் சுயவிவரப் படத்தில் கே.என்.நேரு படம் இருந்தது. தற்போது அது நாசாவின் புதிய அப்டேட்டுகள் வெளியிடும் பக்கம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி நாசாவின் புதிய செய்திகள் அனைத்தும் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. கே.என்.நேரு இறுதியாக சேலம், ஆத்தூரில் திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அதற்குரிய புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். இதன் பின் நாசாவின் தகவல்கள் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளன.