“எழுதிக் கொடுக்கும் அறிக்கையை மட்டுமே படிக்கிறார் எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொறுத்துவதில் ஊழல் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருகிறார். அதேபோல் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் போக்குவரத்துத் துறையில் ஆயிரக்கணக்கில் ஊழல் என்று பொய்யான தகவல்களைக் கூறுகிறார்கள்.
மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை தினந்தோறும் வழக்கமாக அரசு மீதும், முதல்வர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
போக்குவரத்துத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளது.
வாகனங்கள் எஃப்.சி. எடுக்கச் செல்லும்போது குறிப்பிட்ட நிறுவனத்தில் தான் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி வாங்க வேண்டும் என்றும், அமைச்சரான நான் சொல்லும் நிறுவனங்களில்தான் வாங்க வேண்டும் என எந்த உத்தரவையும் நான் பிறப்பிக்கவில்லை. மத்திய அரசின் உத்தரவின் பேரில் தான் வாகனங்கள் இயக்கப்படுகிறது. வாகனங்களில் இரவு நேரங்களில் ஒளிரும் பட்டைகள் பொறுத்த வேண்டும் என்று மத்திய அரசுதான் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரிஜினல் பட்டை விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும், அதற்கும் தடையாணை பெறப்பட்டுள்ளது.
வேகக் கட்டுப்பாடு கருவிகள் பொருத்துவது தொடர்பாக லாரி உரிமையாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டு சொல்லி வருகின்றனர். அது பொய்யான குற்றச்சாட்டு, ஆதாரமற்றது.
வேகக் கட்டுப்பாட்டுக் கருவி 2017 முதல் நடைமுறையிலிருந்து வருகிறது. சென்ற டிசம்பர் மாதம் முதல் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்த 15 நிறுவனங்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 நிறுவனங்கள் வேகக் கட்டுப்பட்டு கருவி பொருத்த விண்ணப்பித்து இருந்தார்கள், அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 நிறுவனங்களுக்கு ஒளிரும் பட்டைகள் பதிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் தற்போது புதிதாக வரும் வாகனங்களுடன் வருகிறது. அவற்றை இணைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை அவற்றை மென்பொருளுடன் தான் இணைக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில் ரூ.24 கோடி மதிப்பில் டெண்டர் 2019 விடப்பட்டது. ஆனால் கரோனோ காலகட்டம் என்பதால் தள்ளி வைக்கப்பட்டது. தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து கோரப்பட்ட ரூ.23 கோடி டெண்டரை ரூ.900 கோடி டெண்டராக உயர்த்தப்பட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் சொல்கிறார். அதை அவர் நிரூபிப்பாரா? அதேபோல் பேருந்தில் மேற் கூரை ஒழுகுவதாகவும் குற்றம் சுமத்துகிறார். மேற்கூரை ஒழுகும் பேருந்துகள் 2012-ல் வாங்கப்பட்டவை. தற்போது வாங்கப்பட்ட பேருந்துகள் அல்ல. இப்போது அது போன்ற நடைமுறையும் இல்லை. 2012ல் அமைச்சராக இருந்தவர் யார்? இப்போது தி.மு.க.வில் உள்ள செந்தில் பாலாஜி தான். அந்த செந்தில் பாலாஜியிடம்தான் ஸ்டாலின் விளக்கம் கேட்க வேண்டும்.
போக்குவரத்துத் துறை செயலாளர் மாற்றம் செய்யப்பட்டதையும் குற்றமாகக் கூறுகிறார். போக்குவரத்துத் துறையில் என்னுடைய கால கட்டத்தில் மட்டும் மூன்று செயலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதற்கு பதிலாக புதியவர்களை நியமிக்கப்பட்டு தானே ஆக வேண்டும்? நாள்தோறும் தவறாக எழுதிக் கொடுக்கும் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். இந்த அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது.” என்றார்.