
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும் இந்த குழுவினர் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்றத் தொகுதி வாரியான பொதுக்கூட்டங்களில் பொறுப்பு அமைச்சர்களுடன், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அந்த வகையில், இன்று (17-02-24) ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பொதுக்கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மதத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் நடத்த நினைக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது. புதிய கல்வி கொள்கை மூலம் 5,8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்து நமது மாணவர்களை படிக்கவிடாமல் பா.ஜ.க செய்கிறது. எங்களுக்கு தேசிய கீதமும் முக்கியம். ஆனால், அதைவிட தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம். இனிமேல், அனைத்து கழக நிகழ்ச்சிகளும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும்.
2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது பிரதமர் மோடி பல வாக்குறுதிகளை அளித்தார். அவை வாக்குறுதி அல்ல வடை. கடலில் மீன்கள் எங்கு உள்ளது என்று செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்படும் என்று பிரதமர் மோடி வடை சுட்டார். ஆனால், மீனவர்கள் கடலில் எங்கு உள்ளனர் என இலங்கை தெரிந்துகொள்ளும் வகையில் மத்திய அரசு செய்துவிட்டது. பா.ஜ.க ஆட்சியில் தான், வட மாநிலத்தில் ஒரு கி.மீ தூர சாலைக்கு ரூ.125 கோடி செலவிட்டார்கள். அதிமுகவை விரட்டியது போல் அவர்களின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. மதுரை எய்ம்ஸுக்கு வந்தது ஒரு செங்கல் மட்டும் தான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை.
தமிழ்நாட்டுக்கான நிதிப் பகிர்வில் மத்திய பா.ஜ.க அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. வெள்ள பாதிப்புக்கு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு தரவில்லை. நாம் செலுத்திய வரிப் பணத்தைதான் கேட்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விரைவில் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்” என்று பேசினார்.