Skip to main content

“இபிஎஸ் சிரிப்பிற்கான அர்த்தம் இப்பொழுதுதான் தெரிகிறது” - அமைச்சர் உதயநிதி 

 

Minister Udayanidhi spoke about EPS OPS car issue

 

இபிஎஸ் சிரிப்பிற்கான அர்த்தம் இப்பொழுதுதான் தெரிகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

சேலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மணமக்கள் கலைஞரும் தமிழும் போல் வாழ வேண்டும். முதல்வர் ஸ்டாலினும் உழைப்பும் போல் வாழவேண்டும் என்று சொல்லுவார்கள். நான் தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள் எப்படி இருக்கக்கூடாது என வாழ்த்திக் கொண்டு இருக்கிறேன். 

 

ஓபிஎஸ் இபிஎஸ் மாதிரி இருந்து விடாதீர்கள். சட்டப் பேரவையில் அருகருகே அமர்ந்து இருப்பார்கள். ஆனால் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கொள்ளவோ பேசிக்கொள்ளவோ மாட்டார்கள். இதற்கு நானே சாட்சி. கண்கூடாகப் பார்த்துள்ளேன். யார் மிகப்பெரிய அடிமை என்பதில் மிகப் பெரிய போட்டி நடக்கும். சட்டமன்றத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரிடமும் எனது காரை தவறுதலாக எடுத்துச் சென்றது குறித்து பேசினேன். நீங்கள் எடுத்துச் செல்லுங்கள் கமலாலயம் மட்டும் போய்விடாதீர்கள் எனச் சொன்னேன். அப்பொழுது கூட இபிஎஸ் வாயை திறக்கவில்லை. சிரித்துக் கொண்டே இருந்தார். அதுக்கான அர்த்தம் இப்பொழுது தான் தெரிகிறது. 

 

ஓபிஎஸ் மட்டும் உடனடியாக எழுந்து எங்கள் கார் எந்த காலத்திலும் கமலாலயம் செல்லாது என்றார். இப்பொழுது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கமலாலயத்தில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களது எஜமானர் மோடியின் சிக்னலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்” எனக் கூறினார்.


 

இதை படிக்காம போயிடாதீங்க !