தமிழக ஆளுநர் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது. இன்று கூடிய சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அவரது உரையில், “தமிழக ஆளுநர், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளது தமிழ்நாட்டு மக்களையும் இந்த சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கிறார் என்றுதான் பொருள். 10க்கும் மேற்பட்ட மசோதாக்களின் கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்ட விரோதமாகும்; ஜனநாயக விரோதமாகும்; மக்கள் விரோதமாகும்; மனசாட்சி விரோதமாகும். அனைத்துக்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும். உச்சநீதிமன்றம் ஓங்கி தலையில் குட்டு வைத்தவுடன் அவசர அவசரமாக கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகமாடுகிறார் ஆளுநர். அரசியல் சாசன சட்டப்பிரிவு 200இன் கீழ்படி மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் போது அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்'' என்றார்.
இதனை தொடர்ந்து முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், “ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். ரத்து செய்ததாக குறிப்பிடவில்லை. அமைச்சர் கூறவேண்டிய கருத்துக்களை சபாநாயகரே தெரிவித்து வருகிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பேரவையை கூட்டியது ஏன்?. அதனால், மசோதாக்களில் இருக்கும் சட்டச் சிக்கல்கள் குறித்து ஆராய வேண்டும். மேலும், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்த ஜெயலலிதா என்ற பெயரை நீக்கியது ஏன்?. என்று கேள்வி எழுப்பி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து சட்டப்பேரவை முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “திமுக ஆட்சியில் தான் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவர் இதுவரை அதற்கு ஒப்புதல் தரவில்லை. ஓராண்டு காலம் இந்த மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். எந்தவித காழ்ப்புணர்ச்சி இல்லாமல், இது தொடர்பான மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர். தீர்மானம் நிறைவேற்றப்படும் போது அவையில் இருக்கக் கூடாது என்பதற்காகவே வெளிநடப்பு செய்துள்ளனர். ” என்று கூறினார்.