Skip to main content

"குற்றச்சாட்டை திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும்" - அமைச்சர் செந்தில் பாலாஜி

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

minister senthilbalaji tweets against arappor iyakkam

 

சமீபத்தில் அறப்போர் இயக்கம், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்வது தொடர்பான டெண்டர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தது.

 

இந்நிலையில், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் இது சம்பந்தமாக, "மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டர் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே. அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரைப் பொறுத்தவரையிலும் டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்பொழுதும் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. அரைகுறையான உண்மைக்குப் புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கிறது.

 

விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக அறப்போர் இயக்கம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

செந்தில் பாலாஜியின் மனு; அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
The court ordered the enforcement department! for Petition of Senthil Balaji

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது. எனவே, தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த போது, அந்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்தது. மேலும், ‘அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது. எனவே, செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.