Skip to main content

“விஜய்யின் படங்களில் கொள்கை இல்லை” - அமைச்சர் பொன்முடி விமர்சனம்!

Published on 08/12/2024 | Edited on 08/12/2024
 Minister Ponmudi criticizes TVK leader Vijay

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். 

அதனை தொடர்ந்து பேசிய த.வெ.க தலைவர் விஜய், “மணிப்பூரில் என்ன நடந்துட்டு இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா அதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் ஒரு அரசு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. சரி அங்க தான் அந்த அரசு அப்படி இருக்கிறது என்றால் இங்கு இருக்கின்ற அரசு எப்படி இருக்கிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் என்ற ஊருல என்ன நடந்தது என எல்லாருக்குமே தெரியும். சமூகநீதிப் பேசுகின்ற அரசு அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியலையே. இவ்வளவு காலங்கள் தாண்டி, இத்தனை வருடங்கள் தாண்டி ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லையே அது தான். இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலை குனிந்து போவார். நடக்கிற பிரச்சனைகளுக்கெல்லாம் நாம் குரல் கொடுக்க வேண்டும். 

கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தால முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களோட சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள். தொல்.திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்பொழுது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்” என்று பேசினார். ஆதவ் அர்ஜூனா மற்றும் விஜய்யின் பேச்சுகள், தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. 

இந்த நிலையில், ஆதவ் அர்ஜூன் பேசியது பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அம்பேத்கர் பற்றி பேசாமல் அரசியல் பேசுகின்றனர். அம்பேத்கரை பற்றி ஏதாவது தெரிந்தால் தானே அவர்கள் பேசுவதற்கு. வாரிசு அரசியல் என்று பேச என்ன தகுதி உள்ளது? மன்னராட்சி, வாரிசு குறித்து பேச தகுதி இருக்கிறதா?. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் கொள்கை இருந்தது. விஜய்யின் படங்களில் கொள்கை இல்லை. எதிர்காலத்தில் தமிழகத்தை வழிநடத்தும் முதல்வராக உதயநிதி ஸ்டாலின் வருவார்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்