
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் குடியநல்லூர் கிராமத்தில் ஏற்கனவே திறக்கபட்ட சேவை மைய கட்டிடத்தில் இன்று மாலை 4 மணியளவில் அரசு ஆரம்பசுகாதார நிலையம் திறப்பு விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையமானது கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு முயற்சியால் கொண்டுவரபட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவிற்கு மாவட்ட அமைச்சர் சிவி. சண்முகம், அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு எம்எலஏ, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், காமராஜ் எம்பி ஆகியோர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த விழாவில் தொகுதி எம்எல்ஏவிற்கு அழைப்புவிடுக்காமல் மாவட்ட நிர்வாகம் புறகணிக்கபட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற பல லட்சம் மதிப்பிலான கட்டிட திறப்பு விழா மற்றும் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள விருப்பம் காட்டாத அமைச்சர் இன்று நடக்கும் விழாவில் முக்கியத்துவம் காட்டுவது ஏன்? அவசியம் என்ன? என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த அரசு விழாவில் தொகுதி எம்எல்ஏ பிரவு அழைக்கப்படவில்லை. அழைப்பிதழில் பெயர் போடவில்லை. எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும் அழைப்பிதழில் பெயர் போடுவார்கள். அழைக்கப்படுவார்கள். ஆனால் இன்று திறப்பு விழா நடத்தும் கட்டிடம் முழுக்க முழுக்க எம்எல்ஏ பிரபுவால் கொண்டுவரப்பட்டது. அவரையே அழைக்காதது ஏன் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து எம்எல்ஏ பிரபு கூறுகையில், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மாறுவார்கள். ஆனால் அரசு அதிகாரிகள் பொதுவாக இருந்து செயல்பட வேண்டும். அரசு அதிகாரிகள் அழைப்பிதழில் பெயர் போட்டியிருக்க வேண்டும், என்னை அழைத்திருக்க வேண்டும். மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த கட்டிடத்தை கொண்டு வந்ததே நான்தான். தொகுதி எம்எல்ஏவான நான் இந்த விழாவிற்கு செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏவான பிரபு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாகவே அழைப்பிதழில் பிரபு பெயர் போடப்படவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
நீங்கள் கோஷ்டி அரசியல் செய்வதற்கு எங்கள் ஊர்தான் கிடைத்ததா? விழாவை ரத்து செய்ய வேண்டும் என கட்சிக்கு அப்பார்பட்ட பொதுமக்கள் கூறுகின்றனர்.