Skip to main content

“காவிரியில் நீரேற்று நிலையம் அமைத்து தீர்வு காண்போம்” - அமைச்சர் கே.என்.நேரு உறுதி

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Minister K.N. Nehru assured will find a solution by constructing a water station in Cauvery

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை மேற்கு ஒன்றிய தி.மு.க, குளித்தலை கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் குளித்தலை நகர் பகுதியில் நேற்று (08-04-2024) பெரம்பலூர் மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளர் அருண் நேரு கிராமம் கிராமமாகச் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது வைகைநல்லூர் பஞ்சாயத்து கீழ குட்டப்பட்டியில்  தமிழ்நாடு நகர் புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு அருண் நேருவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, “இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் நாம்  40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் 9 தொகுதிகளை உள்ளடக்கியது. திருச்சி மாவட்டத்திற்கு  நம்முடைய  முதலமைச்சர் 3000 கோடி ரூபாயை ஒதுக்கினார். வளர்ச்சிப் பணிகளை செய்து முடித்து இருக்கிறோம். கரூரை எடுத்துக் கொண்டால், மாவட்ட கழக செயலாளர் செந்தில் பாலாஜி எதைக் கேட்டாலும் செய்து தருகிற முதலமைச்சர் நமது முதலமைச்சர். குளித்தலையில் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்ட பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனை குளித்தலையில் அமைந்துள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தற்பொழுது ரூபாய் 46 கோடியில் கட்டிடப் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. நமது பிரதான பணி என்ன என்று சொன்னால், காவிரியின் அந்தப் பக்கம் முசிறி,  மண்ணச்சநல்லூர் ஆகியவையும்,  இந்தப் பக்கம் குளித்தலை,  கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளுக்கு காவிரியில் இருந்து  நீரேற்று நிலையங்கள் அமைக்கும்  திட்டம் மூலம் விவசாயிகளும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் திட்டம் உருவாக்கப்படும்.

பொதுமக்கள் மீதும் விவசாயிகள் மீதும் அக்கறை கொண்ட நம்முடைய  அரசு  இனி வரும் காலங்களில் இந்தத் திட்டத்தை கடமையாக எண்ணி செயல்படுத்துவோம். மத்தியில் நமது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமேயானால், நாம் நினைக்கிற அனைத்து பணிகளும் நிறைவேறும். விவசாயம் செழிக்கவும், வேலை வாய்ப்பினை உருவாக்கவும், பயனுள்ள இந்தத் திட்டத்தினை நிறைவேற்றியே தீறு வோம். இன்றைக்கு இருக்கிற மோடி அரசு சமூக நீதிக்கு எதிரானது. சமூக நீதிக் கொள்கை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இதற்கு முன்பு இத்தகைய சமூக நீதி கொள்கைகளை அவர்கள் தேர்தலில் அறிக்கையாக தந்ததில்லை. ஆனால் இன்றைக்கு தனது தேர்தல் அறிக்கையில் சமூக நீதி அரசாக தேர்தல் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

நீட் தேர்வை பொறுத்த வரையில் இது மாநில அரசுகளின் உரிமை என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். ஆரம்பத்தில் சொன்னார்கள், ஒன்றியத்தில் ஆளுகிற பிஜேபி அரசு 400 இடங்களை கைப்பற்றும் என்று. ஆனால் இன்றைக்கு நிலைமை 200-க்கு கீழாக  பெறுவார்கள் என கருத்துக் கணிப்புகள் கூறுகிறது. எனவே நமது இந்தியா கூட்டணி 270 இடங்களை கைப்பற்றினாலே ஆட்சி அமைக்க முடியும். நாம் 7 ல் ஒரு பங்காக இருக்கிறோம். எனவேதான், பெரம்பலூர் பாராளுமன்றத்தை பொறுத்தவரையில் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற நமது செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், நானும்  இருக்கிறேன். நாம் இணைந்து மக்களுடைய குடிநீர் பிரச்சனை, விவசாயிகளுக்கான தண்ணீர் பிரச்சனை எதுவாக இருந்தாலும்  இணைந்தே கட்டாயம் நிறைவேற்றுவோம் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். எனவே உதயசூரியனுக்கு வாக்களித்து அருண் நேருவை  பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு தாருங்கள்” என கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து, பிரச்சாரத்தின் போது,வேட்பாளர் அருண்‌நேரு பேசியதாவது, “ஒன்றியத்தில் ஆளுகிற அரசு தமிழகத்தை அனைத்து வளர்ச்சி திட்டங்களிலும் வஞ்சித்து மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது. நூறு நாள் வேலை  வாய்ப்பு  திட்டத்திற்கு கடந்த ஆறு மாதங்களாக நிதி வழங்காமல் இழுத்து அடிக்கிறார்கள். நாம் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால் 26 பைசாவை மட்டும் தருகிறார்கள். ஆனால் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவர்கள் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால் அவர்களுக்கு இரண்டு ரூபாய் 70 பைசா தருகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு, தமிழ்நாட்டை மேலும் வளர்ச்சி பாதையில் செல்ல விடாமல் தடுக்கும் முயற்சியாக செய்து கொண்டுள்ளார்கள்.

எனவே நீட் தேர்வில் இருந்து விளக்கு பெற, இந்தப் பகுதி மக்களின் குடிநீர் விவசாயத்திற்கு தண்ணீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நமக்கு ஆதரவான அரசு ஒன்றியத்தில் அமைய வேண்டும். அப்பொழுது நாம் நினைக்கின்ற அத்தனை வளர்ச்சிப் பணிகளையும் மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்து வருகிற நலத்திட்டங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே நலத்திட்டங்கள் மேன்மேலும் உங்களை வந்தடைய நீங்கள் கட்டாயம் வருகிற 19 ஆம் தேதி உதய சூரியன்  சின்னத்தில்  வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை  வெற்றி பெறச் செய்து உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களுக்கு பணியாற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த மண்ணில் இருந்து கேட்கிறேன்  மண்ணின் மைந்தனான எனக்கு வாய்ப்பு தாருங்கள்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான சிறுவன்; தீவிர தேடுதல் பணியில் மீட்புப் படையினர்

Published on 22/06/2024 | Edited on 23/06/2024
The Mysterious Boy in the Kollidam River; Rescuers in intensive search

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான பத்தாம் வகுப்பு மாணவனை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகில் சுமார் 6 அடி உயர தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் பகுதியில் குளிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் இன்று மதியம் தடுப்பணையில் நிரம்பியுள்ள நீரில் குளிக்க வந்துள்ளார். திடீரென சிறுவன் காணாமல் போன நிலையில் பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மீட்புப் படையினர் தொடர்ந்து சிறுவனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்; 38 கடைகளுக்குச் சீல்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
38 shop sealed for selling banned tobacco

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் காவல் ஆணையர் காமினி அறிவுறுத்தலின் பேரில், காவல் ஆணையர் அலுவலகம் மூலமாக மாநகர பகுதியில் உள்ள 13 காவல் நிலையங்களிலிருந்து  72 பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பெறப்பட்டன.

இதனடிப்படையில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு மற்றும் உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டுதலின் பேரில் மாநகர பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகள் அனைத்தும் இன்று  அமைக்கப்பட்ட 9 குழுக்களில் அடங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஆயுதப்படை பிரிவை சார்ந்த காவலர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறையினர் உள்ளடங்கியோர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 38 கடைகளுக்கு சுமார் ரூ.12 லட்சம் அபராதம் விதித்து, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்; தொடர்ந்து இது போன்ற கடைகள் வரும் நாட்களில் மாவட்டம் முழுவதும் சீலிடப்படும் என்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடைகள் சீல் செய்யப்படும் என்றும் கூறினார்.

இது போன்று பொதுமக்களும், உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் விற்பனை செய்வது கண்டறிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.