செய்தி மற்றும் விளம்பரத் துறையின் அமைச்சரான கடம்பூர் ராஜ், அவரது தொகுதியான கோவில்பட்டி வந்தபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, பேசிய கடம்பூர் ராஜூ, “தற்போதைய கரோனா கட்டுப்பாட்டைக் கருத்தில்கொண்டு நிலைமைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் காரணமாகத்தான் திரையரங்குகளில், 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. ஆயினும் மத்திய அரசு அதனைப் பரிசீலனை செய்யக் கோரியதன் அடிப்படையில், தமிழக முதல்வர், உள்துறை மற்றும் அதிகாரிகளுடன் பேசி, நல்ல முடிவெடுத்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டார். சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்று தெரிந்ததும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தவிர சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவதற்கும், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. கரோனா காரணமாக டிசம்பர் மாதம் நடக்கும் பொதுக்குழு கொஞ்சம் தாமதமாக நடத்தப்படுகிறது” என்றார்.