![Minister I.Periyasamy who collected votes in the traditional manner](http://image.nakkheeran.in/cdn/farfuture/76MVaPLVBnkm9AK3NX9QPdNz4B8tV4Baf_zzPUGiA-Y/1711562851/sites/default/files/inline-images/iperiyasamy--dove-art.jpg)
நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.