இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “யூடியூப் சேனல்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேர்காணல் வழங்கி வரும் சிலர் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து தங்களது சொந்த கருத்துக்களை முன்னிறுத்தி வருகிறார்கள். கூட்டணிக் கட்சியை பற்றியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைப் பற்றியும் யூடியூப் சேனல்களில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல. அந்தக் காணொளியைக் காணும் மக்களுக்கு இது பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து மற்றும் கட்சியின் எண்ண ஓட்டம் இதுதான் எங்கிற தவறான பிம்பத்தை மக்களிடம் எடுத்துச் சென்றுவிடுகிறது'' எனக் கூறியிருந்தார்.
மேலும் பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் பாஜகவில் வகித்துவரும் பொறுப்புகளிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் இன்று கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நான் உண்மையைப் பேசினதுக்காக மட்டும்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு எதுவும் இல்லை. நான் உண்மையைப் பேசி இருந்தேன். என்னைப் பற்றி ஒரு தனிப்பட்ட தாக்குதல் வரும்பொழுது அதற்குப் பதில் சொல்லும் கடமை இருக்கிறது. பாஜக நிர்வாகி செல்வகுமார் என்ற ஒருவர் கொச்சையான டிவிட்டர் பதிவை லைக் செய்துள்ளார். பலமுறை எனக்கு அவரிடமிருந்து கால்கள் வந்தது. அதற்கு நேரடியாக நான் பதிலடி கொடுத்தேன். பதிலடி கொடுத்ததற்காக நீக்கப்பட்டுள்ளேன். தனிநபர் சார்ந்து அது திமுக காரராக இருக்கட்டும், விசிக காரராக இருக்கட்டும், பாஜக காரராக கூட இருக்கட்டும் யார் தாக்கினாலும் அவர்களுக்குத் திரும்ப பதிலடி கொடுக்கத்தான் செய்வேன். இது என்னுடைய உரிமை. இந்த சுதந்திரத்தை முடக்குவது என்பது வருத்தமாக இருக்கிறது. அதுவும் கட்சிக்குக் களங்கம் விளைவித்தேன் என்று சொல்லி என்னை சஸ்பெண்ட் செய்திருப்பது மன வருத்தத்தைத் தருகிறது. மன உளைச்சலையும் தருகிறது.
எட்டு வருடமாக இந்தக் கட்சிக்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய சினிமா பணிகள், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்கட்டும் எதுவுமே இல்லாமல் நான் பாஜகவிற்காக, நாட்டிற்காக ஐந்து பைசா கூட வாங்காமல் என்னுடைய சொந்த காசில் அல்லது கடன் வாங்கியாவது மத்தவங்களுக்கு உதவி செய்துகொண்டு வந்திருக்கிறேன். அதற்கு நிறைய உதாரணம் இருக்கிறது; உண்மையும் இருக்கிறது. அதற்கு சாட்சியம் இருக்கிறார்கள். கரோனா காலகட்டத்திலும் சரி, இப்பொழுதும் சரி மக்களுக்காக நான் நிறைய செய்து கொண்டிருக்கிறேன். எங்கள் ஃபேமிலிக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. யாருக்காக இருந்தாலும் சரி. நடனக் கலைஞர்களுக்குக் கூட உதவிகள் எல்லாம் பண்ணி இருக்கிறோம்.
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழர் பிரிவில் பணியாற்றி இதுவரை நான் வெளிநாட்டிலிருந்து 28 பேரை இங்குப் பத்திரமாகக் கொண்டு வந்திருக்கிறேன். மியான்மர், கம்போடியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நிறைய பேரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். இப்படி ஏகப்பட்ட விஷயங்களை என்னுடைய சொந்த செலவில் கூட நான் செய்து கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது நான் பாஜகவிற்கு களங்கத்தைக் கொண்டு வந்தேன் என்று சொல்வது ரொம்ப வருத்தத்தைத் தருகிறது. செல்வகுமார் என்ற நபர் அதுவும் கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு முன்புதான் பாஜகவில் சேர்ந்த நபர் வந்த உடனே கட்சியில் பெரிய பொறுப்பை வாங்கி இன்னைக்கு அவர் எனக்கு எதிராக, கொச்சையான டிவிட்டுட்டு லைக் போட்டிருக்கிறார். அதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்கமாட்டேன். நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன். என்னை யாராவது தாக்கினார்கள் என்றால் திருப்பி அடிக்கிற கேரக்டர். சசிகலா புஷ்பாவும் அப்படித்தான் திருப்பி அடிக்கிற கேரக்டர். இதுக்கும் கட்சி களங்கத்திற்கும் சம்பந்தமே கிடையாது'' என்றார்.