Skip to main content

குரங்கு என்று சொன்ன விவகாரம்; அண்ணாமலை பதில் 

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

The matter said to be a monkey; Annamalai Answer

 

கடந்த சில தினங்கள் முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்த போது குரங்கு என்ற சொல்லை பயன்படுத்தியது பலரிடமும் கண்டனங்களை பெற்றது. தற்போது அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒரு பத்திரிகையாளராக உங்களை நான் எப்படி அணுகுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். எந்த நேரத்திலும் நாம் எதற்கும் ஒப்பீடு செய்வது கிடையாது. குணாதிசயத்தை சொல்லுகின்றோம். அண்ணாமலை பத்திரிகையாளர்களை குரங்கு என்று சொன்னார் என சொல்லுகிறார்கள். இது புதுவிதமாக இருக்கிறது. நான் கற்றுக் கொண்ட தமிழில் அதுபோல் இல்லை. என்னுடைய பேச்சு வழக்கிலும் அதுபோல் இல்லை. ஒரு மனிதன்  சீறிப்பாயும் பொழுது சொல்லுவோம், ஏன் புலியைப் போல் பாய்கிறீர்கள். ஏன் இந்த விலங்கைப் போல் பிராண்டுகிறீர்கள். எதற்கு இந்த விலங்கைப் போல் தாவித் தாவி வருகின்றீர்கள் எனச் சொல்லுவோம். உங்களை குரங்கு எனச் சொல்லிவிட்டார். உடனே பத்திரிகையாளர்கள் பொங்க வேண்டும் என்று மூன்று நாட்களாக பொய்யான விஷமச் செய்தியை பரப்பிப் பார்த்தார்கள். ஆனால் பத்திரிகை நண்பர்களுக்கு நடந்தது என்ன என்பது தெரியும்.

 

நான் தவறே செய்யாத போது பத்திரிகையாளர்களிடம் நான் ஏன் வருத்தம் கேட்க வேண்டும். இத்தனை பத்திரிகையாளர்கள் பல இடங்களில் என்னைப் பார்க்கிறீர்கள். யாராவது ஒருவர் கை உயர்த்தி சொல்லுங்கள். நான் உங்களை மரியாதையாக நடத்தவில்லை என்று. நீங்கள் எப்பொழுது அழைத்தாலும் போனை எடுத்து கட்சி சார்பாக என்ன கேள்வியைக் கேட்டாலும் பதில் சொல்லுகிறேன். பிறர் சொல்லுவதை நீங்களும் நம்ப வேண்டாம். நானும் நம்பக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்