தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அப்படி யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. பீகார் மாநில அதிகாரிகள் குழுவும் தமிழகத்தில் ஆய்வு செய்து இது குறித்து விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் பெண்களின் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்பதற்காக சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தை மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டும். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது போல் புதுச்சேரியும் வந்தாரை வாழ வைக்கிறது. இதில் இந்தியாவில் உள்ள அனைவரையும் சகோதரத்துவத்துடன் காண வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாநிலங்களிலும் பணியாற்றுகிறார்கள்.
மொழி, மாநில எல்லைகள் கடந்து அன்புடன் பழகும் போது இந்த வேறுபாடுகள் வராது. நமக்கு அச்செய்தி வதந்தியா என்ன என்று தெரியாது. ஆனால் வடமாநில தொழிலாளர்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். அச்சத்துடன் தமிழகத்தையும் மற்ற மாநிலத்தையும் விட்டுச் செல்கிறார்கள் என்று சொல்வது சரியான நடவடிக்கையாக இருக்காது. மொழி வேற்றுமைகள், கொள்கை வேற்றுமைகள் இருந்தாலும் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்திய தேசத்தை சார்ந்தவர்கள் என்ற உணர்வுடன் நாம் பணியாற்றும் போது ஒற்றுமை உணர்வு கட்டாயம் இருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.