மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
அதில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த 10 தொகுதியில், இடம்பெற்றுள்ள விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் விருதுநகரில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், சிவகாசி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதில் அவர் பேசியதாவது, “வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடக்கப்போகிறது. பிரதமர் யார் என்று நிர்ணயிக்கக்கூடிய ஒரு தேர்தல். கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயிப்பது பிரதமர் தான். கேஸ் சிலிண்டரின் விலை இப்போது 1200 ரூபாய். ஆனால், மோடி 2000 ரூபாய் ஆக்க நினைத்துக் கொண்டிருக்கிறார். ரூ.2000 நோட்டு, ரூ.500 நோட்டு அடித்தது போல் 2000 ரூபாய் தான் கேஸ் சிலிண்டர் விலை என பிரதமர் மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால், கேஸ் சிலிண்டர் விலையை 2000 ரூபாய் ஆக்க வேண்டுமா அல்லது 500 ரூபாயாக ஆக்க வேண்டுமா என்று நடக்கக் கூடியது தான் இந்த தேர்தல்.
ஆனால் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலிண்டர் விலையை 500 ரூபாய் ஆக்குவேன் என சொல்கிறார். ராகுல் காந்தி பிரதமராக ஆன உடனே முதல் கையெழுத்து 500 ரூபாய் கேஸ் சிலிண்டர். எது வேணும் 500 ரூபாயா? 2000 ரூபாயா?” என்று கூறினார். இதனையடுத்து, “யாரெல்லாம் காஸ் சிலிண்டரின் விலையை 500 ரூபாய் ஆக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களெல்லாம் கை தூக்குங்கள்?” என்று மாணிக்கம் தாகூர் கூறியவுடன் பொதுமக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து, அவர், “2000 ரூபாய் ஆக்க வேண்டும் என்று யாராவது நினைக்கிறீர்களா?” என்று மாணிக்கம் தாகூர் கூறியவுடன் ஒருவரும் கைதூக்காமல் வேண்டாம் என்று கூறினர்.
இதையடுத்து பேசிய மாணிக்கம் தாகூர், “காஸ் சிலிண்டரின் விலை 2000 ரூபாய் வேண்டாம் என்று கூறுகிறேன். இதனால் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரும். ஜூன் 10ஆம் தேதி ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்வார். பொறுப்பேற்ற உடனே ஜூன் முதல் வாரத்தில் இருந்து சிலிண்டர் விலை 100 ரூபாய் ஆகிவிடும். அதனால் அனைவரும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதேபோல் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சகோதரன் போல் அனைத்து பெண்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறார். மேலும் வருகின்ற 19ஆம் தேதி நீங்கள் அளிக்கக் கூடிய வாக்குகள் அனைத்தும் இந்தியாவில் இருக்கக்கூடிய பெண்கள் அனைவரையும் காப்பாற்றப் போகிறது” என்று மக்களிடம் கலகலப்பாகப் பேசினார்.