Skip to main content

"ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது" - மம்தா பானர்ஜி

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

mamata banerjee talks about union government fund allocation issue 

 

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. மேற்கு வங்கத்திற்கு என பட்ஜெட்டின் போது எதுவும் ஒதுக்கவில்லை. சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் நேற்று தொடங்கிய போராட்டமானது இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி இது குறித்து பேசுகையில், “100 நாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை முடிப்பதில் மேற்கு வங்க அரசு முன்னணியில் உள்ளது. இருப்பினும் இந்த திட்டத்திற்கான 7 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. மேலும் வீட்டு வசதி மற்றும் சாலை வசதி திட்டங்களுக்கான நிதியையும் இன்னும் அளிக்கவில்லை. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையையும் நிறுத்தி விட்டது. மொத்தமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது.

 

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்கத்திற்கு என எதுவும் ஒதுக்கவில்லை. அதோடு மேற்கு வங்கத்தை மத்திய அரசு பாரபட்சமாகவும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாநில அரசின் சட்டப்பூர்வ தர்ணா போராட்டம் நடத்துவேன்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார்.