/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamalhasan-ni.jpg)
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் திருவொற்றியூரில் வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “2015 ஆம் ஆண்டு கனமழை காரணமாகத் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விரைந்து மக்களுக்கு மின்சாரம் கொடுத்தோம். ஆனால் தற்போது அப்படியில்லை. இந்த மாதிரி மழைக் காலங்களில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காகத்தான் தரையில் மின்சார ஒயரை பதித்து மின் இணைப்பு அளித்தோம். தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு நாங்கள்தான் காரணம். மழை வெள்ளம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் வரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் மெத்தனமாக இருந்திருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் உணவு, பால், குடிநீர் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை.” என்று தமிழக அரசு மீது குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதனைத்தொடர்ந்து, கமல்ஹாசனை பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “கமல்ஹாசனை நான் ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆதரவில் எம்.பி.ஆக கமல்ஹாசன் முயற்சிக்கிறார். பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். எனவே, அவருடைய கருத்துக்கு செவி சாய்க்க தேவையில்லை” என்று கூறினார்.
இந்த நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மக்கள் நீதி மையம் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஓடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் கமல்ஹாசனை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
தமிழக முதல்வரும், மாநில அரசும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கிறார் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாத, யாரையும் விமர்சிக்கத் தகுதியே இல்லாதவர், தன்னலமின்றிப் பணிபுரிவோரை குறைகூறுவதை பொதுமக்கள் மட்டுமல்ல, அவருடைய கட்சியினரே ஏற்கமாட்டார்கள்.
2015-ம் ஆண்டில் சென்னையே வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தபோது, தமிழகத்தை ஆண்ட முதல்வர் எங்கே இருக்கிறார், எந்த நிலைமையில் இருக்கிறார் என்றே மக்களுக்குத் தெரியாத நிலை இருந்தது. அப்போதும் இவர்கள் யாரும் களத்தில் இல்லை, இப்போதும் மக்களுடன் இல்லை.
பதவி, அதிகாரத்தைத் தக்கவைக்கவும், சிறைப் பறவையாகாமல் இருப்பதற்காகவும் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் அடிமையானார். வாழ்வு அளித்தவருக்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை பச்சோந்தி என்று விமர்சித்தால், பச்சோந்திக்குத்தான் அவமானம். உயிர்ச்சூழலில் பச்சோந்திக்கும் முக்கியப் பங்கு உண்டு. எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த முக்கியத்துவமும் கிடையாது. எனவே, தனது கொள்கையில் மாறாமல் இருக்கும் கமல்ஹாசனை விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கடுமையாக எச்சரிக்கிறோம். இனியும் ஏதாவது பேசினால், இவர் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)