Skip to main content

’'பெரும்பான்மை பலம் எனக்குத்தான்; பொதுக் குழுவைக் கூட்டுங்கள்‘’ - அமைச்சர்களிடம் எடப்பாடி!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

EPS

 

அ.தி.மு.க.வின் ‘முதல்வர் வேட்பாளர்’ போட்டியில் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் நேருக்கு நேர் மோதல் வெடித்ததால் என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் விழித்துள்ளனர் அ.தி.மு.க செயற்குழு சீனியர்கள். இருவருமே இணைந்து முடிவெடுக்கட்டும் என தற்காலிகமாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கே.பி.முனுசாமி.

அதேசமயம், ’’போட்டியே ரெண்டு பேருக்கும்தான். இதில் இரண்டு பேரும் சேர்ந்து பிரச்சனைக்கு முடிவு கட்டுங்கள் என்றால் எப்படிப் பிரச்சனை தீரும்?‘’ என கே.பி.முனுசாமியை துளைத்திருக்கிறார்கள் செயற்குழு உறுப்பினர்கள். அதற்கு கே.பி.முனுசாமி, ‘’இரண்டு பேரும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள். இப்படியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தால் பிரச்சனை எப்படித் தீரும்? அதனால் தான் தற்காலிகமாக இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியிருந்தது. கொஞ்ச அவகாசம் இருந்தால் எல்லாம் சரியாகும். 7- ஆம் தேதிக்கு என்ன முடிவுன்னு அப்புறம் பார்த்துக்கலாம்‘’ என விளக்கமளித்திருக்கிறார்.

இந்த நிலையில், செயற்குழு முடிந்து வெளியேறிய எடப்பாடியும், பன்னீரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் விவாதித்து வருகின்றனர். செயற்குழுவில் ஓ.பி.எஸ் மோதியதை ஜீரனிக்கமுடியாத எடப்பாடிக்கு, தனது இல்லத்துக்கு வந்த பிறகும் கூட கோபம் குறையவில்லையாம். 

அந்தக் கோபத்துடனே, தனது ஆதரவு அமைச்சர்களிடம் பேசிய எடப்பாடி, ‘’செயற்குழுவின் பெரும்பான்மை ஆதரவு எனக்குத்தான் இருக்கிறது, என்பதை நிரூபித்துவிட்டேன். அதுபோதும் எனக்கு. இதே நிலை தொடர்ந்தால், பொதுக்குழுவிலும் எனக்கான ஆதரவை நிரூபிப்பேன். ரொம்பவும் என்னை டென்சன் படுத்திவிட்டார். அவர் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளட்டும். பொதுக்குழுவைக் கூட்டுவோம். ஓட்டெடுப்பு நடத்துவோம். அதில் யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம். விடமாட்டேன். நாலு வருசம் நல்லாட்சியை நான் தந்திருக்கும் போது என் தலைமையில் தேர்தலைச் சந்தித்தால் என்ன?‘’ என்றெல்லாம் ஆதங்கமாகவும் கோபமாகவும் வெடித்திருக்கிறார் எடப்பாடி.

 

Ad


இதேபோல, தனது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் சீனியர்களிடம் விவாதித்துள்ளார் பன்னீர். அப்போது, ‘’இன்றைக்கு நான் பேசியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? நியாயத்தைத்தானே சொன்னேன். அதற்கு எப்படிக் கோபப்படுகிறார் பாருங்கள். அதிகாரம் ஆசை தலைக்கு ஏறிவிட்டது. அதெப்படி, ரெண்டு பேரும் சேர்ந்து முடிவுபன்றது? ஏதோ, கே.பி.எம்.சொன்னாரேன்னு ஒப்புக்கொண்டேன்.  இனி கட்சித் தொண்டர்கள்தான் முடிவு பண்ண வேண்டும். பொதுக்குழுவைக் கூட்டுவோம். ஆதரவு யாருக்கு அதிகமிருக்கிறதுன்னு பார்த்துடலாம்‘’ என அவரும் கோபம் குறையாதவராகவே ஆதரவாளர்களிடம் பேசி வருகிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்