நாடு முழுவதும் பல இடங்களில் அரசியல் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மகாத்மா காந்தியின் சிலையும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

Gandhi

திரிபுராவில் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, அம்மாநிலத்தின் பெலோனியா பகுதியில் இருந்த சோவியத் புரட்சியாளர் லெனின் சிலையை பா.ஜ.க.வினர் தகர்த்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலையை பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தாக்கி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Advertisment

இதைத் தொடர்ந்துகொல்கத்தாவின் கலிகாட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. மூத்ததலைவர் எஸ்.பி.முகர்ஜி சிலைமீது கறுப்பு மை பூசப்பட்டு, சேதப்படுத்தப்பட்டது. உ.பி. மாநிலம் மீருட் பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலையும்நொறுக்கப்பட்டதாக வீடியோ வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளபரம்பா பகுதியில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். மகாத்மா காந்தியின் சிலையில், மூக்குக் கண்ணாடியை நொறுக்கி தொங்கவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisment

இதுமட்டுமின்றி, சென்னை திருவொற்றியூரில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் அம்பேத்கர் சிலையின் மீது சிவப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வரும் சம்பவங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் அரும்பாடு பட்டு சமூக மேன்மைக்காக உழைத்த நாட்களை எண்ணி, அவர்களது ஆதரவாளர்கள் வீதிகளில் போராடிக்கொண்டிருக்கின்றனர்.