வடசென்னை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் பிரச்சாரத்தின்போது நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அதிமுக தன்னை முன்னிலைப்படுத்துவதற்காகவும், அதனை அரசியலாக்கவும் போராடுகிறது. திமுக இந்த ஆட்சியை அகற்ற வேண்டும், ஏற்கனவே இருந்த ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று போராடுகிறது. ஆனால் நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம். மக்கள் உரிமைகள், பிரச்சனைகளுக்காக போராடுகிறோம்.
இனி ஒரு நாள் எங்கள் பெண்கள் குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீருக்காக அலையக்கூடாது. இதுவரை வாடகை வீட்டிலேயே தங்கியிருந்து தன் வாழ்நாளை கழித்தவன் இனி சொந்த வீடு கட்சி குடியேற வேண்டும் என்று போராடுகிறோம்.
இரண்டு கட்சிகளும் மாறி மாறி செய்த விசயங்களை பார்க்க வேண்டும். அன்றாடம் தேவைகளுக்கான திட்டங்களை செய்தது கிடையாது. கச்சத்தீவை கொடுத்தது ஒரு தேசிய கட்சி. அதே தேசிய கட்சி கச்சத்தீவை மீட்போம் என்கிறது. நீட் தேர்வை ஒரு தேசிய கட்சி கொண்டு வருகிறது. அதற்கு எதிரான தேசிய கட்சி அந்த தேர்வை நடத்துகிறது. அனிதா இறந்தபோது இதே காங்கிரஸ் கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று ஏன் சொல்லவில்லை. இப்போது தேர்தலுக்காக காங்கிரஸ் நீட் தேர்வு குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுகிறது.
இவர்கள் அவர்களை சாடுகிறார்கள். அவர்கள் இவர்களை சாடுகிறார்கள். எங்களுக்கு இவர்களின் பேச்சுக்களை கேட்க நேரமில்லை. நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம். தமிழ் பேசத் தெரியாத மருத்துவர், தமிழ் பேசத் தெரியாத செவிலியர் இருக்கும் மருத்துவமனையில் தமிழ் பேசத் தெரிந்த நோயாளி அங்கு சென்றால் என்ன பயன்? அதேபோல மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் சுழற்சி முறையில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பதவி வகிக்க வேண்டும். அப்போதுதான் அந்தந்த மாநிலங்களை முன்னேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்.
கடந்த ஐந்து வருடத்தில் தமிழக அரசு மூடிய பள்ளிகள் எத்தனை? புதிதாக கட்டிய பள்ளிகள் எத்தனை? குடிநீருக்காக என்ன பேசியிருக்கிறார்கள்? கேட்டால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை சொல்லுகிறார்கள். அதனை சுத்தப்படுத்தித் தரும்போது அதனுடைய கழிவுகள் எங்கு போகும். கடலுக்குத்தான் போகும். கடல் என்ன குப்பைக்காடா?
நிலவளத்தை காப்பற்றுவோம் என்று பேசுகிறார்கள். தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கொடுக்கிற நிலங்களை எப்படி கொடுக்கப்போகிறோம், எப்படி அளவிடப்போகிறோம் என்று எந்த அரசியல் கட்சியாவது பேசியிருக்கிறதா? அவர்களுக்கு கொடுக்கும் நிலத்தை ஏன் நிலமில்லா ஏழைகளுக்கு உங்களால் பட்டா போட்டு கொடுக்க முடியவில்லை. இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்தார்கள் திமுக ஆட்சியில். எங்க கொடுத்தார்கள். தரிசு பொட்டக்காடு, குடியிறுப்பே இல்லாத இடத்தில் கொடுத்தார்கள். வீடு கட்டி வாழ முடியும் அளவுக்கு அந்த இடம் இருக்கிறதா? தரிசு நிலம், விவசாய நிலம் என்கிறார்கள். குடியிருப்பு மனைப்பட்டா என்று கொடுத்தீர்களா? கக்கன்ஜி காலத்தில் கொடுக்கப்பட்ட மனைப்பட்டாக்கள் இன்று திருவாரூரில் இறால் பண்ணையாக இருக்கிறது. அது மக்களுக்கானது என நிரூபிக்க நான்கு வருடம் நாங்கள் போராடினோம். எல்லோரும் பொய்களும், புரட்டுகளுமாக அரசியல் செய்கிறார்கள். நாங்கள் அந்த அரசியலை செய்யவில்லை. இவ்வாறு கூறினார்.