ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றது. புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்று (10.07.2024) முதல் வரும் 19 ஆம் தேதி வரை தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தலா 6 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடிய நிர்வாகிகள் செல்போன் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.