
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் இறுதி நாளான இன்று பல்வேறு வார்டுகளில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த 4வது வேட்பாளர் நாகராஜ் தனது வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக மாநகராட்சிக்கு வரும்போது முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் வேடம் அணிந்து 100க்கும் மேற்பட்டவர்களை ஊர்வலமாக அழைத்து வந்தார். வேட்பாளர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழையும் போது அவர்களும் நுழைய முற்பட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் வேடமணிந்துவந்த நபர் காவல்துறையினரிடம், ‘முதல்வர் ஸ்டாலின் மற்றும் கலைஞரை உள்ளே அனுப்புங்கள்’ என சிபாரிசு செய்தார்.
அதற்கு காவல்துறையினர் கரோனா கட்டுப்பாடு வழிக்காட்டு நெறிமுறைபடி, வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் தவிர வேறு யாரும் உள்ளே செல்லக்கூடாது’ எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் ரஜினிகாந்த் வேடம் அணிந்து வந்த தொண்டர்கள் எல்லாம் வெளியே நின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.