தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப். 19ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. அதேசமயம், தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி இன்று சென்னையின் பல்வேறு வார்டுகளில் பல்வேறு கட்சியினரும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதன்படி, நுங்கம்பாக்கத்தில், 117வது வார்டுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் சின்னையன் என்ற ஆறுமுகம் நுங்கம்பாக்கம் மண்டல 9வது அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
அதேபோல், நுங்கம்பாக்கத்தில் 112 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயதேவி என்ற திருநங்கை நுங்கம்பாக்கத்தில் உள்ள 9வது மண்டல அலுவலகத்தில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதேபோல், நுங்கம்பாக்கம் 9வது மண்டலத்தில் 113வது வார்டுக்கு பா.ஜ.க.சார்பில் போட்டியிடும் மஞ்சு பார்கவி என்ற பெண் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
நுங்கம்பாக்கம் 9வது மண்டல அலுவலகத்தில் 124 125 126 ஆகிய வார்டுகளில் போட்டியிடுவதற்கு அமமுகவினர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
அதேபோல், எழும்பூர் தொகுதி 99வது வார்டு வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஐ.ஏ.எஸ். சிவகாமி மனுத் தாக்கல் செய்தார். அமைந்தகரையில் பி.வர்சா என்பவர் 107 வார்டில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
தாம்பரம் மாநகராட்சியில் 43 வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் இரா.மோகன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவருடன் அதிமுக மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வந்தார்.
வில்லிவாக்கம் தொகுதி 95வது வார்டில் பாஜக கட்சி சார்பில் அஸ்வினி மருதுபாண்டி போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.