சென்னையில் சாலை அமைப்பது குறித்து தயாநிதி மாறன் எம்.பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறிய பதிலின் காரணமாக தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதினார்.
அதில், “தமிழ்நாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டத்திற்குச் சாத்தியமான எல்லா உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குவதன் மூலம் அந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. கடந்த காலத்தில் வழங்கப்படாத பல்வேறு சலுகைகள் மற்ற பெரிய NHAI திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒத்துழைக்கவில்லை என்பது போன்ற தோற்றம் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலால் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. நாடாளுமன்றத்தில் எம்.பி தயாநிதி மாறன் குறிப்பிட்ட கோரிக்கையைப் பரிசீலிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வழங்கிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. தயாநிதி மாறன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை நான் நிதின் கட்கரியிடம் அளித்தேன். அவர் நெடுஞ்சாலைத் துறையின் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை செய்தார். இதன்பின் மார்ச் மாதத்தின் இறுதிக்குள் சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் துவங்கப்படும் என இன்று அவர் தெரிவித்துள்ளார். இதை வரவேற்கிறோம்.
தேவைப்பட்டால் நெடுஞ்சாலைத் துறை தலைவரை சென்னைக்கு அனுப்பி தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன் கலந்துரையாடி அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பேன் என உறுதி அளித்தார். மறுமதிப்பீட்டின்படி ரூ. 7000 கோடியில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. மொத்த நிதியையும் மார்ச் மாதத்தில் ஒதுக்குவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணானது. இத்திட்டம் நிறைவேறும் காலம் வந்துவிட்டது” எனக் கூறினார்.