பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், ‘தமிழைத் தேடி’ பரப்புரை பயணத்தின் 7 ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.
இதில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் கோ.க.மணி, பாவாணர் தமிழியக்கத்தின் அமைப்பாளர் முனைவர். கு. திருமாறன், உலக திருக்குறள் பேரவைத் துணைத் தலைவர் திருக்குறள் சு.முருகானந்தம், எழுத்தாளர் ஜவஹர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “தற்போது உலக அளவில் 7105 மொழிகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 850 மொழிகள் உள்ளன. உலக அளவில் ஆண்டுதோறும் அழிந்து வரும் 25 மொழிகளில் தமிழ் எட்டாம் இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை 10 ஆண்டுகளுக்கு முன்பு எச்சரிக்கை செய்துள்ளதாகவும், வேகவேகமாக வேற்று மொழி சொற்கள் கலந்துவிடுகிற அடிப்படையில் கணக்கிடப்பட்டு தமிழுக்கு எட்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கூட்டம் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறது.
உலகில் செம்மொழி தகுதி பெற்ற எட்டு மொழிகளில் ஒன்றாகத் தமிழ் திகழ்கிறது. தமிழ் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. ஆங்கிலம், சீனம், இந்தி உள்ளிட்ட உலகில் அதிகம் பேசப்படும் 13 மொழியில் ஒன்றாகத் தமிழ் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது எனத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழ் மொழி அழிந்து விடும் என யுனெஸ்கோ அறிவித்துள்ளதாக ஒரு கூட்டம் அவதூறு பரப்பி வருகிறது. ஆனால் யுனெஸ்கோ அவ்வாறு எதையும் கூறவே இல்லை. தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும். நாம் தற்போது கொச்சைத் தமிழில் தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
தமிழ் வளர்ச்சித் துறையும் தொழிலாளர் நலத்துறையும் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி, வணிக நிறுவன பெயர்ப் பலகைகளைத் தமிழில் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த முறை திருச்சிக்கு வரும்போது தமிழில் பெயர்ப் பலகை வைத்துள்ள வணிகர்களுக்கு மலர்க் கொத்து கொடுத்து பாராட்டுவேன். தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் அனைவரும் தங்கள் நிறுவன பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
பெயர்ப் பலகையில் 5 பங்கு தமிழ் மொழியிலும், 3 பங்கு ஆங்கில மொழியிலும், 2 பங்கு அந்த வணிகர் விரும்பும் மொழியிலும் பெயர்ப் பலகை வைத்துக்கொள்ள சட்டம் உள்ளது. அந்த சட்டப்படி பெயர்ப் பலகைகளை வணிகர்கள் மாற்றி அமைக்காவிட்டால் ஒரு திங்கள் (மாதத்தில்) இடைவெளி விட்டு கருப்பு மை கொண்ட வாளியையும், ஏணியையும் தூக்கிக் கொண்டு வருவோம். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளி விடாதீர்கள். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. பிற மொழி கலக்காமல் ஒரு மொழியில் பேச வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். தமிழைத் தேடிய எனது பயணத்தை வாழ்த்தி வழியனுப்ப வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். கடந்த 21ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இப்பயணம் நாளை மதுரையில் நிறைவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.