ராஜ்பவன் நமது இடம். ஆளுநர் மாளிகையாக முதலில் அது இல்லை எனவே அங்கு புதிய சட்டமன்றம் கட்டலாம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சட்டப் பேரவையில் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், “புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். முதல்வரை நானும் சேர்ந்து வேண்டுகிறேன். விரைவில் முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் ஒரு புதிய சட்டமன்றத்தைக் கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஏனென்றால் கேரளா, ஆந்திரா எல்லாம் பாருங்கள். ராஜ்பவன் நமது இடம். அதன் வரலாற்றைப் படித்துப் பார்த்தேன். முதலில் ஆளுநர் மாளிகையாக அது இல்லை. வேறொரு பிரச்சனைக்காக ஆளுநரை அங்கு அமர்த்தினார்கள். ஆகையினால் அதை எடுக்கலாம். கிண்டி ரேஸ் கோர்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். 700 ஏக்கர் கொண்ட இடம். அவர்கள் பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார்கள், அதையும் எடுக்கலாம். முதலமைச்சரின் காலத்தில் புதிய சட்டமன்றம் உருவானது என்பதை செய்ய வேண்டும். ஆனால் இந்த கால கட்டத்திலேயே கட்ட வேண்டும் அப்போதுதான் நாம் இருப்போம்” எனக் கூறியுள்ளார்.