
வரும் மார்ச் 1ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினின் 68வது பிறந்தநாள். இதனைக் கொண்டாட திமுகவினர் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தேர்தல் காலகட்டம் என்பதால் பொதுமக்களுக்கு அதிக அளவில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாக நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளரும், கழக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினருமான எ.வ.வேலு விடுத்துள்ள அறிக்கையில், “திமுகவை இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அமரவைத்த தலைவரின் பிறந்தநாளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கோலாகலமாக நகரம், ஒன்றியம், பேரூர், கிளை கழகங்களில் கொண்டாடப்பட வேண்டும்.
இந்தப் பிறந்தநாளில் உலக வெப்பமயமாதலைத் தடுத்திட மரக்கன்று நடுதல், ஏரி, குளம், குட்டைகளைத் தூர்வாரி சீரமைத்தல், மருத்துவ முகாம், ரத்த தானம் போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்த வேண்டும். மார்ச் 1 ஆம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவிக்கப்பட வேண்டும்” என அறிவித்துள்ளார்.