கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி வெற்றிபெற்றுள்ளார்.

இன்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு திருப்பங்களுக்குப் பின்னர் நடக்கும் வாக்கெடுப்பு இதுவென்பதால், இதுகுறித்து பேசிய குமாரசாமி, ‘எனக்கு எந்தவிதமான பயமும் இல்லை. நான் எந்தத் தடங்கலும் இன்றி சுலபமாக வெற்றிபெறுவேன்’ எனத் தெரிவித்திருந்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக கர்நாடக சட்டசபைக்கான சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் சுரேஷ்குமார் திரும்பப்பெறப்பட்ட நிலையில், ம.த.ஜ. - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.ஆர்.ரமேஷ்குமார் சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்வதக அறிவித்தனர். விவசாயக் கடன்களை ரத்துசெய்யாவிட்டால் வரும் மே 28ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்தனர். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சபாநாயகர் நீங்கலாக 116 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.