நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே முதுநிலை மருத்துவர் கலந்தாய்வு இரண்டு சுற்று முடிந்திருக்கும் நிலையில், மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வுக்குச் சலுகையாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை அதிகரிக்கவே நீட் தேர்வு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மருத்துவத்தில் முதுநிலை படிப்புக்கு நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளது.
இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “21 ஆம் நூற்றாண்டின் பைத்தியக்காரத்தனமான முடிவை ஒன்றிய பாஜக அரசு எடுத்துள்ளது. தங்க வாத்தைக் கொல்லாதே; மருத்துவத்தின் தரத்தைக் குறைக்காதே. பாஜக அரசின் அறிவிப்பைக் கேட்டது முதல், நாடு முழுவதும் மருத்துவர்கள் மனம் நொடிந்து போய் உள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவு அறிவுப்பூர்வமான செயல் அல்ல. ஒன்றிய அரசின் முடிவு மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவத்துறையின் தரத்தைக் குறைக்கும் செயலாகும். ஒட்டுமொத்தத்தில் கட்-ஆப் பூஜ்ஜியமாகக் குறைந்தது ஒன்றிய சுகாதாரத் துறையின் தற்கொலைக்கு ஒப்பான செயலாகும். சில சுயநிதி கல்லூரிகளை வாழ வைக்க மருத்துவத்துறையை அழிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.