2010ஆம் ஆண்டு தி.மு.கவில் இணைந்த குஷ்பு, 2011 சட்டசபை தேர்தலிலும், 2014 நாடளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுகவில் எதிர்பார்த்த எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற வாய்ப்புகள், கட்சி பதவிகள் கிடைக்காத காரணத்தினால் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் அந்த ஆண்டு நவம்பர் மாதமே திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் குஷ்பு.
திமுகவில் இருந்த நிலையே காங்கிரஸ் கட்சியிலும் குஷ்புவுக்கு தொடர்ந்தது. ஆனால், திமுகவில் வெறும் தேர்தல் பிரச்சார பீரங்கியாய் மட்டுமிருந்த குஷ்பு, காங்கிரஸில் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பை பெற்றார். ஆனால் அவர் எதிர்பார்த்த அதிகார ரீதியான எந்தப் பதவியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அந்த நிகழ்ச்சியின்போது தமிழக தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார். அதே வேளையில் குஷ்புவுக்கு ராஜ்யசபா சீட் வழங்க பா.ஜ.க திட்டம் தீட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. குஷ்புவின் அரசியல் பதவி 'கனவு' பா.ஜ.கவிலாவது பலிக்குமா என பேசப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் பொறுப்பில் இருந்த தனக்கு, பாஜகவிலும் அதே நிலையில் பொறுப்பு வழங்கினால் நன்றாக இருக்கும் என்று மேலிடத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும் இதுவரை கட்சிப் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில், தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி வருகிறது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலுல் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர், ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்புவுக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வின்போது தற்போது நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களே தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனாலேயே ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியானர்வகளை தேர்வு செய்து பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.