சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததும் திமுக நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் நேற்றைய முன்தினம் (28.07.2021) தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 தரப்படும், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும், பெட்ரோல் - டீசல் விலை ரூ. 5 குறைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் தேர்தலின்போது உறுதியளித்தபடி திமுக பல அறிவிப்புகளைச் செயல்படுத்தவில்லை என்று கூறி, திமுக தன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அதிமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். கரோனா விதிகளின்படி தொண்டர்கள் கூட்டம் கூடாமல், அவரவர் வீட்டு வாசலிலேயே முழக்கமிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில், மாவட்டம் முழுவதும் அவரவர் வீடுகள் முன்பு திமுகவிற்கு எதிரான பதாகைகளை ஏந்தி, அதிமுகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்க, அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், மாவட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘பொய்யைச் சொல்லி, புரட்டைச் சொல்லி ஆட்சிக்கு வந்துட்டீங்க! சொன்ன வாக்குறுதிகள் என்னாச்சு?’, ‘அஞ்சமாட்டோம்; அஞ்சமாட்டோம்! பொய் வழக்குக்கு அஞ்சமாட்டோம்!’, ‘விடியல்கார அண்ணாச்சி! பெட்ரோல் டீசல் விலை என்னாச்சு?’, ‘திமுக அரசே நீட் தேர்வை ரத்துசெய்!’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷமிட்டும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.